கடும் நெருக்கடிக்குள் ரணில்; வேட்பாளர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகத் தீர்மானம்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 22 மாவட்டங்களில் போட்டியிட்ட 262 வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள், கட்சியில் இருந்து விலகத் தயாராகி வருகின்றனர் என்று அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பார் என்ற தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 439 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு வரலாற்றில் படுதோல்வியை சந்தித்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்தத் தோல்விக்கான நேரடி காரணம் ரணில் விக்ரமசிங்கவின் தலைமை மற்றும் அவரது தன்னிச்சையான தீர்மானங்கள் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேர்தலைச் சந்தித்தால், தற்போது கிடைத்துள்ள இரண்டரை இலட்சம் வாக்குகள், ஒன்றரை இலட்சமாகக் குறைந்து மிக மோசமான நிலைமையை எதிர்நோக்க தாம் தயாரில்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.