ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் உட்பட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் உட்பட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை பெற்று வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திருவெண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் மனு கையளிக்கப்பட்டது.

திருவெண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கொரோனா ஊரடங்கை முன்னிட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதன் போது கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  மேலும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அன்சர்மில்லத், மாவட்டச் செயலாளர் மாலிப்பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களைக் கையளித்திருந்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான ஆயுள் தண்டனைக் கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய ஆயுள் சிறைக் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.