வேற்றுச்சேனை சம்பவம் தொடர்பில் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் செயலணியால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக, வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் இப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளுடனேயே முன்னெடுக்கப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பிரதேசசபையின் அமர்வு இன்று காலை பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சபை அமர்வு சபையின் வழமைக்கு அமைய நடைபெற்றதை தொடர்ந்து தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக தீர்மானத்தினை முன்வைத்து தவிசாளர் சிறப்புரையாற்றினார்.

இந்த அமர்வின் போது வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் பிக்கு ஒருவர் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு  உறுப்பினர்களினால் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  திணைக்களம் நடவடிக்கை எடுப்பது என்றால் தொல்பொருள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழ் ஆய்வாளர்களின் பிரசன்னத்துடன் நடவடிக்கை யெடுக்கவேண்டும் என கோரப்பட்டதுடன் இப்பகுதியில் உள்ள தொல்பொருள்களை,தொல்பொருள் அமைவிடங்களை பாதுகாப்பது எனவும் இங்கு தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர்,

விசேடமாக தொல்பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த செயலணிக்கு எதிராக சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தோம். அந்த கண்டனத் தீர்மானத்திற்கு மாறாக எங்களது போரதீவுப்பற்று வெல்லாவெளி வேத்துச் சேனை கிராமத்தில் தனிப்பட்ட தனியார் காணியில் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்வதாக வந்து மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய ஆய்வுக் குழவும், இந்த செயலணியில் உட்பட்டு இருக்கின்ற பௌத்த பிக்குக்கள் இருவரும் வந்துள்ளனர்.

அப்பிரதேச மக்களுக்கோ,சபை தவிசாளருக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ அறிவிக்காமல் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதால் மக்கள் பதட்டநிலை அடைந்து அச்சம் கொள்கின்றார்கள். முந்தை நாள் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற்ற பிற்பாடு நேற்று அங்கு மக்கள் கூடியிருப்பதாக அறிந்து அங்கு சென்றிருந்தேன். rajani வேற்றுச்சேனை சம்பவம் தொடர்பில் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்

ஆங்கு சென்று பார்கின்ற போது வேற்றுச்சேனை மக்கள் மாத்திரமல்ல, எங்களது போரதீவு பிரதேச இளைஞர்கள் பலர் கூடியிருந்து எதிர்புக்களை காட்டி இருந்தார்கள். ஆங்கு வைரவர் ஆலயமும்,நாகதம்பிரான் ஆலயமும் தனிநபர் காணியில் அமைந்து காணப்படுகின்றது.

அந்த காணியினுடைய ஒருபகுதியான ஒன்றரை ஏக்கர் காணியினை விளையாட்டு மைதானத்திற்கு கொடுத்து இருக்கின்றதாகவும் மைதானத்தில் ஸ்ரேடியம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த இடத்தில் காணப்படுகின்றது.

இந்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் மக்களுடைய ஆலோசனைகளைப் பெற்று சபையினுடைய தவிசாளர், உறுப்பினர்களது ஆலோசனைகளைப் பெற்று இப் பிரதேசத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போரதீவுப்பபற்று பிரதேசத்தினை கடந்த காலங்களில் ஆய்வு செய்த பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் ஆய்வு செய்தபோது இங்கு பல தமிழர்களின் தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளதுடன். கிமு காலம் தொட்டு இங்கு தமிழர்கள் வாழ்ந்துவந்தமைக்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. இவை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுமுள்ளன.

வெல்லாவூர் கோபால்,பேராசிரியர் பத்மநாதன் ஆகியோரின் ஆய்வுகள் குறிப்பாக வெல்லாவெளி விவேகானந்தபுரம்,தளவாய்,பாலையவட்டை, 35ஆம் கிராமம் போன்ற இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு உறுதிப்படுத்தப்டிருக்கின்றது.

இப்பிரதேசங்களில் காலங்காலமாக தமிழர்கள் ஆண்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றது. பேராலயங்களாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம்,ஸ்ரீ சித்திரவேல் ஆலயம் காணப்படுகின்றது. இந்த ஆலங்கள் ஆரம்ப காலங்களில் இருந்து தொன்று தொட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ள எத்தணிப்பது எங்களது மக்களுக்கு மற்றும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு அதிர்ப்தி அளிக்கின்றது. நாங்கள் கடந்த மாதத்தில் கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தின்படி இங்கு ஒன்றும் நடைபெறவில்லை. இவ்வாறான சம்பவங்கள் மனவேதனையளிக்கின்றது.

ஆங்கு காணப்படும் ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகளில் பூசைகள் நடைபெறுகின்றது. அதேபோல் அறுவடை காலங்களில்பூசைகள் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று கூட பௌர்ணமி பூசைகள் நடைபெற்றதை காணக்கூடிதாக இருந்தது.

இந்த பிரதேசத்தில் காணபடுகின்ற தொல்பொருள் சான்றுகளைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமையாகும். இவைகளை கொண்டு அருங்காட்சியம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளுக்கு சபையில் போதிய நிதி வசதி ஏதும் இல்லை, இந்த நிதி வசதிகளை பெறுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் யாராவது நிதி உதவி செய்ய முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், இந்த கண்டனப் பிரேரணையினை சபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து ஏகமானதாக ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.