கொரோனாவிற்குப் பின் வாழ்வில் ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான செல்நெறி

தங்களைக் கொன்றழிக்கக் கூடிய ‘கொரோனா’வை முற்றிலும் இல்லாதொழிக்க இயலாத உலகு அதனுடன் வாழ்ந்துதான் அதிலிருந்து விடுபடலாம் என்னும் துணிவுடன் அதற்கான தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்தும் மருந்துகளையும் தேடிய நிலையில் தற்காலிகமாகத் தங்களைப் பாதுகாப்பதற்கு இயன்ற முறைகளைக் கையாண்டு கொண்டு ‘கொரோனா ’ வுக்குப் பின்னதான வாழ்வை வாழத் தொடங்கிவிட்டது.

‘கொரோனா’வுக்குப் பின்னதான ஈழத்தமிழர்களின் வாழ்வும், ஈழத்தமிழர்களை ஆள்வதற்கான சட்டத்தகுதியை 22.05.1972 உடன் இழந்து விட்ட தனது பாராளுமன்றத்திற்கான, 9வது பாராளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட்டு 5ம் திகதி நடாத்த சிறிலங்கா எடுத்துள்ள அரசியல் முயற்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் ‘கொரானா’ வீரியுடன் அது தங்களைக் கொன்று அழிக்கும் என்பது தெரிந்தும் மாற்றுவழி காணும் வரை வாழப் புறப்படும் உலகைப் போல், தங்களைக் கொன்றழிக்கும் ஆட்சியைத் தம்மிலிருந்து விலத்த உலகம் தவறிய நிலையில்,அந்த ஆட்சிக்குள் மாற்று மருந்து காணப்படும் வரை வாழப்புறப்பட்டு விட்டனர்.

அதாவது தங்களை இனஅழிப்புச் செய்ததைச் செய்வதை நியாயப்படுத்தும் சட்டவாக்கங்களைச் செய்வதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதையே நோக்காகக் கொண்டு நடாத்தப்படும் இத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது வாக்குரிமை என்னும் அடிப்படை மனித உரிமையைப் பிரயோகித்து அதனைத் தடுப்பதற்கான தமது அரசியல் கடமையைச் செய்ய ஆயத்தமாகிக் கொண்டுள்ளனர்.

ஆனால் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள், சிங்களப் படைகளின் குடியேற்றங்கள் என்பவற்றின் வழி மக்கள்தொகையில் தமிழர்களைச் சிறுபான்மையாக்கிச் சிங்களவர்களையே அத்தொகுதிகளிலும் பிரதிநிதிகளாக வரவைப்பதன் மூலமும், ஏற்கனவே பாராளுமன்றத்தில் தமிழர்களுக்குரிய பிரதிநிதித்துவ எண்ணிக்கை போதியளவு இல்லாத நிலையை மேலும் குறைவடையச் செய்கின்றனர்.

இதனால் தேர்தலில் வெற்ற பெறுபவர்களால் கூடச் சிறிலங்காவின் சட்டவாக்கங்களில் மேலாண்மை செய்ய இயலாத இயல்பு நிலை உள்ளது. இதனால் சிறிலங்கா அரசாங்கத்தில் சட்ட ஆட்சி என்பது இல்லாத பாதுகாப்பற்ற நிலையில் படைபல மற்றும் சிங்கள பௌத்த காடைத்தனம் ஏற்படுத்தும் இனங்காணக் கூடிய அச்சத்துடனேயே ஈழத்தமிழர்கள் தொடர்ந்துத் வாழ்கின்றனர்.

தங்களை பாதுகாப்பான அமைதியில் தங்கள் வளர்ச்சிகளை உறுதிப்படுத்தி வாழவைப்பதற்காக மக்கள் தங்களை ஆளும் உரிமையை கையளித்து ஒரு அரசாங்கத்தை வாக்களிப்பு மூலம் உருவாக்கி அவ் அரசாங்கத்தின் குடிகளாக வாழ்வதை அம்மக்களின் உள்ளக தன்னாட்சி உரிமைப் பிரயோகம் அழைப்பர்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் தனது குடிகளாக உள்ள அம்மக்களுக்குப் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்ச்சிகளையும் வழங்காது விட்டால் அத்தகைய மக்கள் அவற்றை அடைவதற்காக சனநாயகவழிகளில் போராட வேண்டும்.

இந்த சனநாயகவழிப் போராட்டங்களாலும் அவற்றை அடையாவிட்டால் அம் மக்கள் உலகின் குடிகள் என்ற வகையில் உலக நாடுகளையும் உலக அமைப்புக்களையும் தமக்கு உதவுமாறு கேட்கும் உரிமையை வெளியக தன்னாட்சி உரிமை என்பர்.
சிறிலங்காவில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை – சிங்களபௌத்த பெரும் பான்மையினரின் விருப்புக்கு எதிராக எந்த அரசியல் அதிகாரப் பகிர்வையும் செய்ய மாட்டோம் என நாட்டின் பிரதமரும் அரசதலைவரும் அரசின் கொள்கையாகவே அறிவித்துள்ளமை ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்டு விட்டதைத் தெட்டத் தெளிவாக்கியுள்ளது.

இதனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்த வெளியக தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தியே தங்களின் இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்னும் நிலை மீளவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இதனை வெளிப்படுத்தக் கூடிய முறையில் புலம்பெயர் தமிழர்கள் கருத்துக் கோளங்களை உலகில் உருவாக்க உழைத்து, ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை உலகை ஏற்கவைப்பமன் மூலமே ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீளவும் அவர்கள் பெற்றிட உதவுவதை கொரோனாவுக்குப் பின்னராக அரசியல் பயணத்தின் செல்நெறியாக மாற்ற வேண்டும்.