“வின்ட் றஷ் பரம்பரை”: யார் இவர்கள்? ஏன் இவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்?-தமிழில் ஜெயந்திரன்

309
278 Views

வின்ட் றஷ் நினைவு தினம் ஜூன் 22 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.கரீபியன் தீவுகளில் இருந்து 1948 இல் 500 குடியேற்ற வாசிகள் அழைத்துவரப்பட்ட நிகழ்வு தொடர்பில் இத்தினம் அவர்களால் நினைவுகொள்ளப்படுகின்றது.

வின்ட்றஷ் ஊழல் நிகழ்ந்து இற்றைக்கு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. பல தசாப்தங்களாக ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து, தொழில் புரிந்து வந்த, பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகள்,உரிய உத்தியோகபபூர்வ ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை என்ற ஒரேயொரு காரணத்தால் ஐக்கிய இராச்சியத்தில் அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு,நாடுகடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்காக இறுதியில் அன்றைய பிரித்தானிய அரசு இந்த வின்ட்றஷ் பரம்பரையிடம் மன்னிப்புக்கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அக்காலப்பகுதியிலிருந்து இது தொடர்பான அறிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று இந்தப் பரம்பரையைச் சேர்ந்த சிலர் முறையிடுகிறார்கள்.

1948ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கரிபியன் நாடுகளிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்கு வந்து சேர்ந்தவர்களே (அழைத்துவரப்பட்டவர்கள்). ”வின்ட்றஷ் பரம்பரை” என அழைக்கப்படுகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, பிரித்தானியாவை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரித்தானியாவுக்கு இவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

ஜமேக்கா,திரினிடாத்,ரொபேகோ நாடுகளையும் ஏனைய கரிபியன் தீவுகளையும் சேர்ந்த தொழிலாளர்களுடன்,1948ம் ஆண்டு ஆனி மாதம் 22ம் திகதி இங்கிலாந்து நாட்டின் எசெக்ஸ் பிரதேசத்தின் ரில்பெரி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த ‘எம்வி எம்பயர் வின்ட்றஷ்” (MV EMPIRE WINDRUSH) என்ற கப்பலின் பெயரால் இந்த பரம்பரை அழைக்கப்படுகிறது. 492 பயணிகளைக் கொண்டிருந்த இந்தக்கப்பலில் வந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆக இருந்தார்கள்.

ஒரு பரம்பரை முற்றுப்பெறுகிறது

ஐக்கிய இராச்சியத்தில் ஏற்கனவே வசித்து வந்த பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமாக வதிவிட உரிமையை அளித்த, 1971ம் ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட குடிவரவு சட்டத்துடன்; இந்த வருகை ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்னர் வெளிநாடு ஒன்றில் பிறந்து, பிரித்தானிய கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் ஒருவர், இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழக்கூடியதாக இருந்தது. இவற்றுள் முதலாவதாக, குறிப்பிட்டவர் தொழில் செய்யும் உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக அவர்களது பெற்றோரோ அல்லது பெற்றோரின் பெற்றோரோ பிரித்தானியாவில் பிறந்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இப்பரம்பரையினர் தற்போது எங்கே இருக்கிறார்கள்?

இவ்வாறாக வந்துசேர்ந்தவர்களில் பலர் சரீரத் தொழிலாளர்களாகவும்,துப்புரவுத் தொழிலாளர்களாகவும், தாதிகளாகவும் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் ஒருசிலர் ‘கறுப்பு பிரித்தானியர்” என்ற புதிய வகுப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஐக்கிய இராச்சியத்தில் இவர்களின் வதிவு சட்டபூர்வமானதா?

நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களின் விவரங்களை உள்நாட்டு விவகாரங்களுக்குரிய பணிமனை பேணிப் பாதுகாக்கவில்லை என்பது மட்டுமன்றி அதனை உறுதிப்படுத்துகின்ற எந்தவிதமான ஆவணங்களையும் உரியவர்களுக்கு வழங்கவில்லை.

இக்காரணத்தினால் வின்ட்றஷ் பரம்பரையைச் சேர்நதவர்கள் தாம் சட்ட ரீதியாக ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். 2010ம் ஆண்டில் வின்ட்றஷ் குடியேறிகள் ஐக்கிய இராச்சியத்துக்கு வந்துசேர்ந்ததை உறுதிப்படுத்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் உள்நாட்டு விவகாரங்களுக்கான பணிமனையால் அழிக்கப்பட்டன.

அதுவரை சுதந்திரம் அடைந்திராத பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலிருந்து இந்த மக்கள் வந்துசேர்ந்த படியால் தாங்கள் பிரித்தானிய பிரஜைகள் என்றே அவர்கள் எண்ணினார்கள்.

அவர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருந்தார்கள்?

தொடர்ந்து தொழில் புரிவதற்கும் தேசிய சுகாதார சேவைகளிலிருந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும், ஏன் ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்குமே சான்று தேவை என்று,உரிய ஆவணங்களைக் கொண்டிராதவர்களுக்கு சொல்லப்பட்டது.

தொழில் புரிவதற்கோ, ஒரு சொத்தை வாடகைக்கு பெறுவதற்கோ அல்லது சுகாதார சேவைகள் போன்ற நன்மைகளைப் பெறுவதற்கோ ஆவணங்கள் அவசியம் தேவை என்ற நிலையை,தொடர்ந்து வந்து அரசாங்கங்களினால் உருவாக்கப்பட்ட குடிவரவு சட்டங்கள் ஏற்படுத்தியதன் காரணத்தினால்; இந்த மக்கள் தமது வதியும் உரிமை தொடர்பாக அச்சத்தோடு வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அரசு என்ன செய்தது?

வின்ட் றஷ் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நடத்தப்பட்ட முறைக்காக அந்த நேரத்தில் பிரதம மந்திரியாகப் பதவி வகித்த தெரேசா மே அவர்கள் மன்னிப்புக்கோரினார். இது தொடர்பான ஒரு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுடன் நட்ட ஈடு வழங்கும் திட்டமும் ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு உள்நாட்டு விவகாரங்களுக்கான பணிமனையில் நிலவிய அவநம்பிக்கை, கவனக்குறைவு போன்றவற்றைக் கொண்ட கலாச்சாரத்தையும் அறிக்கை விமர்சித்திருந்தது.

குறிப்பிட்ட விசாரணை 30 சிபாரிசுகளைச் செய்திருந்தது. ஆவற்றில் பின்வரும் மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவுக்கொள்கையின் ”எதிர்ப்பு சூழலை” உள்நாட்டு விவகாரங்களுக்கான பணிமனை முழுமையாக மீள் பரிசீலனை செய்யவேண்டும்.

குடியேறிகளுக்கான ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும்

இனங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு ஒரு சபை உருவாக்கப்படவேண்டும்.

விசாரணையின் சிபாரிசுகளை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்த ஒரு திட்டத்தைத் தயாரிப்பதாகவும் அரசு சொல்லியிருக்கிறது.

இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய ஆவணங்களும் நட்டஈட்டுத்தொகைகளும் வழங்கப்படும் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் வின்ட்றஷ் பரம்பரைக்காக குரல்கொடுத்துவரும் ஆர்வலர்களோ,இச்செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் கொடுக்கப்படும் நட்டஈடுகள் போதுமானதாக இல்லை என்றும் விமர்சனம் செய்கிறார்கள்.

நன்றி- பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here