கருணா குறித்த விசாரணைக்காக உயர் பொலிஸ் குழு நியமனம் ; வாக்குமூலம் பெற கிழக்கு விரைவு

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை செய்ய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கிழக்கு மாகாணத்திற்கு சென்று சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கிழக்கிற்கு சென்றுள்ள குழு பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும், கருணா கருத்து வெளியிட்ட இடத்திலும் தேவையான தகவல்கள் திரட்டப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு, கருணா அம்மானிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும், சுகயீனம் காரணமாக வாக்குமூலம் வழங்க சமூகமளிக்க முடியாது என கருணா அம்மான் நேற்று அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். கிழக்கு மாகாணம் சென்றுள்ள குழுவினர் கருணாவின் வாக்குமூலத்தையும் பெறுவதற்கு முற்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.