கூல் வீசிய தொப்பியை அளவானவர்கள் அணிந்து கொண்டார்கள்

நிதானம்,நியாயம் இழந்து கொந்தளிப்பான கருத்துகளை கொட்டுவதனால் தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று விலாசப்படுத்தும் அரச கட்சிகளின் முகவர்கள் தாம் யாருக்காக அரசியல் செய்யப் போகிறோம் என்பதை தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு அறியப்படுத்தி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்  கருத்து தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் கூல் அவர்களின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இலங்கை மக்களாட்சி முறையுள்ள ஜனநாயக நாடாகும். இந்த மக்களாட்சி முறை சகல இன மக்களுக்கும் பொதுமையானதாகவும்,முற்போக்கானதாகவும் அமைய வேண்டுமென்றுதான் அசல் ஜனநாயகவாதிகள் விரும்புகின்றார்கள்.

அந்தவகையில் கொலைகாரர்கள்,குடிகாரர்கள் ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள புத்திஜீவியான பேராசிரியர் ரட்னஜீவன் கூல் அவர்கள் ஆரோக்கியமான கருத்து ஒன்றை ஊடகங்கள் மூலம் வெளியிட்டார்.

இக்கருத்தினை முற்போக்காளர்கள்,பகுத்தறிவாளர்கள்,அறிவியல் சிந்தனையாளர்கள் போன்றோர் வரவேற்கவே செய்வார்கள். ஆனால் பிற்போக்குவாதிகள்,கொலைகாரர்கள்,குடிகாரர்கள், ஏமாற்றிப் பிழைப்பவர்கள் எதிர்க்கவே செய்வார்கள்.

குறிப்பாக இக்கருத்தினைக் கேட்டதும் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் சிலர் கொதித்தெழுந்தமை வியப்பாக உள்ளது. ஊடகங்கள் மூலமாக கூல் அவர்களுக்கு எதிராக சரமாரியாக கண்டனக் கணைகளைச் சொரிந்தார்கள். ,

மட்டக்களப்பில் பொதுஜன பெரமுனவின் தலைமை வேட்பாளர் கொதித்தெழுந்து குமுறும் தொனியில் பேராசிரியர் கூல் அவர்களுக்கு எதிராக கண்டனங்களை உணர்ச்சிவசப்பட்டு கொட்டினார். தமது எஜமானர்கள் எதை கூறுகிறார்களோ அதைக் கூறினால் தான் சலுகைகள் கிடைக்கும் என்ற தோரணையில் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன.

தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று விலாசப்படுத்தும் இவ்வாறான நபர்கள் கூல் அவர்களின் முற்போக்கான கருத்தினை விளங்காமல் ,இருப்பதென்பது தம்மை பிற்போக்குவாதியென ஏற்றுக்கொள்வதுபோல் அமைந்துள்ளது. நிதானம்,நியாயம் இழந்து கொந்தளிப்பான கருத்துகளை கொட்டுவதனால் இவர்கள் யாருக்காக அரசியல் செய்யப் போகின்றார்கள் என்பதை மக்கள் தேர்தலுக்கு முன்பே அறிந்து கொள்வதற்கு அருமையான சந்தர்ப்பமாக இதனைக் குறிப்பிட முடியும். இவர்கள் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்த போகிறார்களா? அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான எஜமானர்களை திருப்திப்படுத்த போகிறார்களா ? என்பதனை மக்கள் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவுள்ளது.

ஆளும் தரப்பு எஜமானர்கள் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள்.அவற்றைச் சொல்லுகின்ற,செய்கின்ற இயந்திர வாய்களாகவே இவ்வாறான முகவர்கள் இருக்கப் போகின்றார்கள்.

எவ்வாறாவது ஊடகங்களில் முகம் தெரிந்தால் போதும் என்பதே போலி அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகும். தமக்கு அளவாக இருந்தால், தொப்பியை அணிந்து கொள்வார்கள் என்பதற்கு அமையக் கூல் அவர்கள் வீசிய தொப்பியை அளவானவர்கள் அணிந்து கொண்டார்கள் என்பது தான் உண்மையாகும்.

அன்று அழிக்கப்பட்ட தமிழினத்தின் பிரதிநிதி என்று மார்தட்டிய பச்சோந்தி,இன்று அழித்த அதிகார வர்க்கத்தின் முகவராக இருந்து,ஆர்ப்பாட்டங்களை செய்யாமல் அடங்கிப்போய் தமிழ் மக்களுக்கு எதிராக கொக்கரிப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

‘மடத்தனங்களுக்கு மருந்து வாகடத்திலும் இல்லை’ என்பது கிராம மக்களின் கருத்தாகும். அதனை அடிக்கடி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுவதும்,போதை-பேதை வெறியர்கள் போன்று உளறுவதும்ääகொள்கையற்ற குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்புகளின் பிறப்பியல்பாகும். இப்படியானவர்களை மக்கள் இனங்கண்டு ஒதுக்கவேண்டும்.

இளைஞர்களுக்குத் தேவை முற்போக்கான-ஒழுக்கமான வழிகாட்டலும் தலைமைத்துவமும் ஆகும். தமிழர் பண்பாடுகளுக்கு எதிரான மது-மாது,போதை-பேதை,வெட்டுக்குத்து அரசியலுக்குள் இளைஞர் யுவதிகளை வழிப்படுத்தும் விசமிகளின் பிடியிலிருந்து இளைஞர் யுவதிகளை பெற்றோர்கள் விடுவித்துக் கொள்ளுங்கள்.இல்லையேல் இழந்தலைமுறை நாசமாக்கப்பட்டு நட்டாற்றில் கைவிடப்படுவார்கள்.

உயர் பண்புகளுள்ள தமிழர்கள் மத்தியில் ,ஆவாக்குழுக்கள் என்னும் வெட்டுக்குத்து வெறியர் கும்பலை தமிழ் மண்ணில் உருவாக்கும் மறைமுக சக்திகளின் செயற்பாட்டிற்கு வெளிப்படையாக வழிகாட்டும்ää இருட்டர்களின் தலைமைத்துவத்தில் இருந்து,அப்பாவி இளைஞர்களை பெற்றோர் பாதுகாவலர்கள் மீட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.