ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு ? அமெரிக்கத் தூதுவர்

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு, மக்கள் எழுப்புகின்ற சந்தேகங்கள் தனக்கும் இருப்பதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் விடயங்களை ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணி மக்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பன்முகத்தன்மை அற்றதாகவும் தெரிகின்றது.

ஏன் இவ்வாறு ஒரு பகுதிக்கு மட்டும் தொல்பொருள் செயலணி நியமிக்கப்பட வேண்டும். உன்ற கேள்வி எனக்குள்ளும் எழுகின்றது.

ஜனநாயகத்திற்கு எப்போதும் சிவில் நிர்வாகமே முக்கியத்துவமிக்கதாக அமையும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையானது 30-1 ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகினாலும் மனித உரிமை மீறலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக்கூறல் மூலம் நீதியை நிலைநாட்டுவதில் தனது கடமையை நிறைவேற்றும் என்று நம்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் எந்தப் பிரச்சினையுமில்லை. இலங்கைக்கு வந்த தூதரகப் பணியாளர் தொடர்பான தவறான தகவல், தூதரகத்துக்கு அருகில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் மீதான பொலிஸ் நடவடிக்கை என்பன, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கத் தூதரகப் பணியாளர் தொடர்பாக ஊடகத்தில் வெளியான சில அறிக்கைகள் தவறாக முன்னெடுக்கப்பட்டவை என்றும் கூறிய அவர், குறித்த பணியாளர் வருவதற்கு முன்னர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்ட நடைமுறையை, தூதரகம் பின்பற்றியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே நடைபெறவிருந்த அண்மைய ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்யுமாறு, அமெரிக்கத் தூதரகம் கோரவில்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன் எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் விரைவில் இணக்கத்திற்கு வர முயற்சிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

நன்றி: வீரகேசரி