அன்று சிங்கள அரசின் இனவழிப்பை தடுக்க தவறியவர்கள் இன்று வீதிகளில் இறங்குவது மகிழ்ச்சியானதே

I can’t breathe என கதறியபடி ஜார்ஜ்ஸ் ஃபிளாய்ட் என்ற அந்த மனிதன் இறக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது. உங்களிற்கோ, அல்லது எனக்கோ தெரியுமளவிற்கு அவர் ஒன்றும் பிரபலமானவர் அல்ல. சாதாரண அமேரிக்க வாழ் கறுப்பினத்தவர்.

நிறவெறி கொண்ட வெள்ளையின காவல்துறை அதிகாரியால் அந்தக்கறுப்பின மனிதன் கொடூரமாக கொல்லப்படும் கணொளி பார்ப்பவர்களையெல்லாம் கொதித்தெழச்செய்தது.

தன் நரம்பை நெரிக்கும் நிறவெறி முட்டுக்கு நடுவில் தன்னால் மூச்சு விட முடியவில்லை என்ற அந்த மனிதனின் அவலக்குரல் நிறவெறிக்கெதிரான போராட்டங்களை உலகெங்கும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்த கறுப்பின மனிதன் கொல்லப்பட்ட முறையும், அதன் பின்னால் உள்ள நிறவெறியும் அதனால் இன்று ஏற்பட்டுள்ள போராட்டங்களும் மனித சமூக வரலாற்றில் நீதி தவறப்படும்போதெல்லாம் மக்களிடம் தோன்றும் “அறம்” இன்னும் வற்றவில்லை என்பதை காட்டுகின்றது.

அந்த “அறம்” தான் இன்று கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பெருந்தொகையான மக்களை போராட்டத்திற்கு வரவழைத்திருக்கின்றது.

இப்போராட்டங்களிலெல்லாம் அதிகம் பங்கு கொள்பவர்கள் வெள்ளையர்கள்.
கொன்றவன் ஒரு வெள்ளையன் என்பதால் அறத்தின் பால்பட்டு அதிக வெள்ளையர்கள் வீதிக்கு வருகின்றார்கள்.

இன்று இந்த கறுப்பின மனிதன் நிறவெறியால் கொல்லப்பட்டது போல , அன்று ஒன்றரை இலட்சம் எம் உறவுகள் சிங்கள இனவெறி அரசால் சர்வதேச ஆதரவுடன் இனவழிப்பு செய்யப்பட்டபோது, இந்த உலகிடம் எம் உறவுகளை காக்கவேண்டி ,
உலகின் சகலபகுதிகளிலும் தமிழன் போராடினான்.

இந்த உலக மாந்தர்களிடம் எல்லாம் எம் இனத்தை காக்க உதவுங்கள் என நாம் கதறினோம். யாருமே கண்டுகொள்ளவில்லை. அறம் தவறிய மனிதர்களாக எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். அன்று மனிதம் தவறி வேடிக்கை பார்த்த சர்வதேசத்தால் குழந்தைகள், பெண்கள்,நோயாளிகள், முதியவர்கள் என ஒன்றரை இலட்சம் உறவுகளை நாம் இழந்தோம்.

அன்று சிங்கள அரசின் இனவழிப்பை அறம் தவறி, மனிதம் தவறி தடுக்க தவறியவர்கள் இன்று நிறவெறிக்கெதிராக வீதிகளில் இறங்குவது மகிழ்ச்சியானதே..

ஆனாலும், அன்று எம் குரலை கேட்க மறந்த, அறமும் மனிதமும் அற்ற இந்த உலக மாந்தர்கள் மீது ஈழத்தமிழினத்திற்கு மாறத, என்றும் மறந்துபோகாத கோபமுண்டு..

– அன்பரசன் நடராஜா