நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

இயற்கை எழில்கொஞ்சும் கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமம் எமது வசிப்பிடம்.அப்பா ஒரு போராளி அம்மா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை.சிறுபிள்ளைபராயம் என்னை அம்மா தினந்தோறும் உந்துருளியில் சந்திரன் சர்வதேச பாடசாலைக்கு கூட்டிச்செல்வதும் பி்ன்பு தனது பாடசாலைக்கு அழைத்துச்செல்வதும் என் வாழ்வின் பசுமை நினைவுகள்.

நான் கல்வி கற்ற சந்திரன் சர்வதேச பாடசாலை தமிழீழ அரச கட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட பாடசாலை என்பது அங்கு வடிவமைக்கப்பெற்ற சிறுவர் பூங்காவே சான்று.இங்கு கல்வி கற்ற பள்ளித்தோழிகள் எல்லோரும் எமது பாடசாலைக்கு முன்னால் உள்ள மைதானத்தில் உலங்கு வானூர்தியில் சமாதான பேச்சுக்கு வருவோர் போவோரை ஓடிச்சென்று பார்ப்பது ஒருவித மகிழ்வு.

அன்று சுதந்திர தமிழீழத்தில் வாழ்ந்தோம் என்பதை பின் நாட்களில் சிறிலங்கா அரசும் எமக்கு ஏற்படுத்திய துன்பங்கள் துயரங்கள் அவலங்கள் அவமானங்கள் எமக்கு  உணர்த்தி நிற்கின்றன.nor நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

கொலை வெறித்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால், 2008 செப்டம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சி பகுதியை விட்டுவெளியேறி மக்களுடன் மக்களாக நாங்களும் விசுவமடு பிரதேசத்தை நோக்கி நகர்ந்தோம். அங்கு இடம்பெயர்ந்த நிலையில் இரண்டு மாதங்கள் தற்காலிக கொட்டகைகளில் கல்விகற்றோம்.

2009 ஜனவரியில் எங்கள் கல்வியையும் முற்றும் இழந்து தற்காலிக இருப்பிடங்களாக செல்லும் இடமெங்கும் பதுங்கு குழி வாழ்வாக மூங்கிலாறு,தொடர்ந்து சுதந்திரபுரம் என பயணிப்பில் உயிரிழப்புக்களை கண்முன்னே காணத்தொடங்கிய காலமாகியது.

சிறிலங்கா இராணுவத்தின் இடைவிடாத எறிகணைவீச்சும் ,அதிநவீன மிக்,கிபீர் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்களும் தொடர இடம்பெயர்வுகளும் தொடரலாயின.

புதுக்கடியிருப்பு வீதியினால் எறிகணைவீச்சு துப்பாக்கி சன்னங்கள் வரும் நிலையிலும் அப்பா எங்களை அம்மா தங்கச்சி என்னையும் உந்துருளியில் இரணைப்பாலைக்கு அழைத்துச் சென்றார்.97956557 2995256920543431 7231012089211387904 n நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

அங்கு தற்காலிக பதுங்குகுழியுடன் கொட்டகை அமைத்து நான்கு நாட்கள் இருந்திருதோம் தொடர்ந்தும் அங்கும் இருக்கமுடியாத சூழல்.சிறிலங்கா அரசின் கூட்டுப்படைகளின் தாக்குதல் மேலும் அதிகரிக்க வலைஞர்மடம் நோக்கிச்சென்றோம். மேரி முன்பள்ளி அருகே உள்ள பனங்கூடலில் பதுங்குழி அமைத்து தரப்பாள் கொட்டகைக்குள் வாழ்ந்தோம்.

புதுமாத்தளன் தொடக்கம் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் வரை நீண்ட கடல் நீரேரிப்பகுதிக்குள் நான்கு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த நாலரை லட்சம் மக்கள் வாழவேண்டிய பேரவலமான வாழ்வாக அந்த வாழ்வு மாறியது என்பதை பருவமறிந்த பின்னாளில் நினைக்கின்றபோது நெஞ்சம் கனக்கிறது.fff நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

நாங்கள் வலைஞர்மடத்தில் இருந்த இந்த காலப்பகுதியில் எனது பள்ளித்தோழி நிலா தனது அப்பாவுடன் நாங்கள் இருந்த கொட்டகைக்கு வந்துவிட்டு போனவள் தாங்கள் புதுமாத்தளனில் இருக்கிறம் என சொன்னாள்.

அடுத்தநாள் வந்த செய்தி உயிர் நடுங்கவைப்பதாய் இருந்தது.இன்றுவரை மறக்கமுடியாத என் இனிய தோழி….. அப்பகுதி நோக்கிய சிறிலங்கா படைகளின் எறிகணைத் தாக்குதலினால் அவளது குடும்பத்தில் நிலா,அவளது தங்கச்சி நட்சத்திரா, அவளது அம்மையா, மாமா என அனைவருமே உடல்சிதறி பலியாகிவிட்டனர்.அவளது அம்மா பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.nilaa நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

நிலவின் இழப்பு அந்த வயதிலேயே என் ஆழப்பதிந்துபோன துயரமாய் நிலைத்தது.

நாட்கள் செல்லச்செல்ல யார் உயிருடன் இருப்போம் என்பது நம்பிக்கை இல்லாமல் போய்விட்ட பேரவலம்.ஏப்ரல் மாதம் அங்குலம் அங்குலமாக முள்ளிவாய்க்கால் நோக்கி நகரத்தொடங்கினோம் நாட்கள் செல்லச்செல்ல கண்முன்னே காணும் நிகழ்வுகள் உயிர்வாழ்தலில் இருந்த நம்பிக்கையை குறைக்கத் தொடங்கின.இறந்தவர்களை புதைத்துவிட்டு அருகிலே படுத்துறங்கிய பேரவலம் அங்கு அரங்கேறியது.

வானில் போர்விமானங்கள் கொத்துக்குண்டுகளை வீச, கடலில் இருந்து பீரேங்கிகள் இடைவிடாது முழங்க, தரையிலிருந்து மாறிமாறி பல்குழல் ஆட்லறி எறிகணைகள் இடைவிடாது கொட்ட, துப்பாக்கி சன்னங்கள் மழையெனச் சொரிய;இவற்றுக்குள்ளும் செத்தவர்கள்போக எஞ்சியோர் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறைவைகளாக எழுந்து கொண்டுதான் இருந்தோம்.

இறுதியில் எல்லாமே முடிந்து போனது..

சர்வதேசம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிதறிப்போனது.நம்பவைத்து ஏமாற்றியதாக உணர்வு..

“அப்பாட்டமான இனப்படுகொலை என்பதை அன்று எட்டு வயதில் கண்ணூடாக பார்த்த காட்சிப்படிமானத்தை இன்று உணர்கின்றேன்”

உலக சமுதாயமே,

ஒரு கொடூர இனவழிப்பின் சாட்சியாக,கொல்லப்பட்ட ஏதுமறியா குழந்தைகளின் ஒட்டுமொத்த குரலாக உங்களிடம் கேட்கிறேன்.

இத்தனை கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்ட எமக்கு நீங்கள் எப்போது நீதியை பெற்றுத் தரப்போகிறீர்கள்? ஒரு பெரும் இனவழிப்பை நடாத்தி முடித்துவிட்டு இன்னும் ஆணவத்துடன் இருக்கும் கொலைகாரருக்கு என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்?

                   நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்