ஆறாத வலிகள்;நீதிக்கான ஏக்கம்-பி.மாணிக்கவாசகம்

462
135 Views

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற துயரச் சம்பவங்கள் எண்ணற்றவை. அந்த சம்பவங்கள்  மனிதப் படுகொலைகளாக, மனித உரிமை மீறல்களாக, மனிதத்துக்கு எதிரான மோசமான செயல்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவற்றை போர்க்குற்றச் செயல்களாகவும் திட்டமிட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கையாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வகைப்படுத்தி பதிவு செய்திருக்கின்றன.

கிழக்குக் கரையோரத்தின் ஒரு குறுகிய நிலப்பரப்பாகிய முள்ளிவாய்க்காலிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கின்றோம் என்ற பெயரில் கண்மண் தெரியாத வகையில் எறிகணைத் தாக்குதல்களை அரசபடைகள் நடத்தின. கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த கடற்படையினருடைய தாக்குதல் படகுகளில் இருந்து நிலப்பரப்பை நோக்கி தொடர்ச்சியாக பீரங்கிக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வானில் இருந்து உலங்கு வானூர்திகளும் குண்டு வீச்சு விமானங்களும் தங்கள் பங்கிற்கு வான் வழி குண்டுத் தாக்குதல்களை நடத்தின. சீரான முறையில் பல்குழல் எறிகணை பீரங்கிகளும் குண்டுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. இவற்றுக்கிடையில் சுமார் ஒரு கிலோ மீற்றருக்குக் கிட்டவான தூரத்தில் பாய்ந்து உயிர் குடிக்கத்தக்க வல்ல இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டுகளும் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன.

அந்தப் பெருந் தாக்குதல்களில் 40 ஆயிரம் பேர் வரையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா மன்றம் பதிவு செய்திருக்கின்றது. ஆயினும் அந்த எண்ணிக்கை அதையும்விட அதிகம் என்று அந்த ஊழிப் பேரவலத்தில் சிக்கி உயிர் மீண்டு வந்துள்ளவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மக்கள் அங்கு கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டார்கள் என கண்கண்ட சாட்சிகள் பலரும் கதை கதையாகக் கூறியிருக்கின்றார்கள். மனங்களை உறையச் செய்கின்ற அவர்களின் வாக்குமூலங்கள் பல பல்வேறு வடிவங்களில் பதிவாகி இருக்கின்றன.

புதுமாத்தளன் பாடசாலைக்கு அரச வைத்தியசாலை நகர்ந்திருந்த நேரம் அது. அந்த வைத்தியசாலையில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற எறிகணை தாக்குதல் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகிப் போனார்கள். ஒரு மகன் உட்பட இருபதுக்கும் அதிகமானவர்கள் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்கள்.

அந்த இடம்பெயர் வாழ்க்கை நிலத்தைத் தோண்டி அமைக்கப்பட்ட பங்கர்கள் என்றழைக்கப்படுகின்ற பதுங்கு குழிகளில்தான் நகர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குடும்பமும் ஏனைய குடும்பங்களைப் போன்றுஇ தரப்பாள் கூடாரங்களில்,பெண்கள் அணிகின்ற சேலைகளைக் கொண்டு மறைக்கப்பட்ட பதுங்கு குழி வீட்டில் தஞ்சமடைந்திருந்தது.

அந்தத் தாயார் உணவுக்காகக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தார். தந்தையாரும் ஏதோ செய்து கொண்டிருந்தார். அவர்களின் ஒரேயொரு மகளும் அவர்களுடன் இருந்தார்.தேங்காய் கிடைக்குமா என்று பார்த்து வாங்கிவருவதற்காக வெளியில் போயிருந்த ஒரு மகன் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரம்தான் அந்த அனர்த்தம் நேர்ந்தது. சீறி வந்த எறிகணையொன்று சரியாக இலக்கு வைத்துத் தாக்கியது போல அந்தக் கொட்டில் மீது விழுந்து வெடித்தது. அந்த எறிகணையின் நேரடி தாக்கத்தில் கொல்லப்பட்டார்கள். வெளியில் இருந்து வந்த மகன் கொட்டிலை நெருங்கியபோது, எறிகணை வீழ்ந்து வெடித்தது. இதனால் படுகாயமடைந்தார்.

அந்தக் குடும்பத்தில் அப்போது அவர் மட்டுமே தெய்வாதீனமாகக் காயங்களுடன் உயிர்தப்பினார். அருகில் நெருக்கமாக அமைந்திருந்த கொட்டில்களில் இருந்தவர்கள் சுமார் 20 பேரளவில் அந்தச் சம்பவத்தில் காயடைந்தார்கள்.இந்தச் சம்பவம் குறித்து, புதுமாத்தளன் வைத்தியசாலையில் அப்போது பணியாற்றிய முன்னாள் மருத்துவ போராளி ஒருவர் விபரித்தார்.

பிரமந்தனாறைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தில் மூன்று பிள்ளைகள். ஒரு மகள். இரண்டு ஆண்கள். ஒரு மகன் இயக்கத்தில் இணைந்திருந்தார். மற்றவர் குடும்பத்துக்குத் துணையாக இருந்தார். இந்த எறிகணை தாக்குதல் நடந்தபோது நாங்கள் அருகில் புதுமாத்தளன் பாடசாலைக்கு மாற்றப்பட்டிருந்த வைத்தியசாலையில் இருந்தோம். அப்போதுதான் அந்த வைத்தியசாலை அங்கு இயங்கத் தொடங்கி இருந்தது.

சம்பவ தினத்தன்று அடுத்தடுத்து இராணுவத்தினர் எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தார்கள்.  வைத்தியசாலையைச் சுற்றிலும் தொலைவில் பரவலாக குண்டுகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. எறிகணை ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் வீழ்ந்து வெடித்ததையடுத்து நானும் வேறு சிலரும் அங்கு ஓடிச் சென்று பார்த்தோம்.

எறிகணை வீழ்ந்த வெடித்த இடங்கள் எப்படி இருக்குமோ அதே போன்றுதான் அந்த இடமும் சின்னாபின்னமாகிக் கிடந்தது. அலங்கோலமான அந்த இடத்தில் அந்தத் தந்தையும் தாயும் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்கள். அதைவிட உடல் ஒன்று சிதறியதற்கு அடையாளமாக அவயவங்கள் வீசி எறியப்பட்டுக் கிடந்தன. தலைமுடியுடன் காணப்பட்ட ஒரு தலைப்பாகத்தை வைத்துத்தான் அந்தத் தாய்தந்தையருடன் இருந்த மகளே உடல் சிதறிப் பலியாகினார் என்பதைக் கண்டறிந்தோம். அந்தக் கொட்டிலுக்கு அருகில் இருந்த பனை மரங்களும் குண்டுச் சிதறல்களின் சீற்றத்திற்கு ஆளாகியிருந்தன.

எறிகணை தாக்கிய அந்த கொட்டில் வீட்டின் தரப்பாள் துண்டுகளும் ஏனைய பொருட்களின் சிதறல்களும் அந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றுக்கிடையில் ஒரு மனிதக் கையும் காணப்பட்டது. அதில் கட்டப்பட்டிருந்த நூல்தான் அந்தச் சம்பவத்தில் உடல் சிதறிப் போன பெண்ணின் கை என்று அடையாளம் காட்டியது.

தாய்தந்தையர் இறந்துவிட்டார்கள். உடல் சிதறியதனால் சகோதரியைக் காணவில்லை. வீட்டை நெருங்கி வந்தபோது மகன் கைகள் கால்களில் படுகாயமடைந்தார். வெளியில் வீழ்ந்து கிடந்த அவரைத் தூக்கி எடுத்தவுடன் அவர் மயங்கிப் போனார். அவசர அவசரமாக அருகில் இருந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம்.

ஆனால் அங்கு மருந்து வசதிகள் இருக்கவில்லை. முதலுதவியாக கையில் அகப்பட்ட சீலைத்துண்டுகளினால் கட்டு போடப்பட்டது. அதனால் இரத்தப் பெருக்கைத் தடுக்க முடிந்திருந்தது. அந்த நேரம் சர்வதேச செஞ்சிலுவைக் கப்பல் படு காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்து,அந்தப் பகுதி கடற்பரப்பில் நங்கூரம் பாய்ச்சி இருந்தது.

ஏனைய காயக்காரர்களுடன் அந்த இளைஞனையும் நினைவிழந்த நிலையில் சர்வதேச அந்தக் கப்பலில் ஏற்றி திகோணமலைக்கு அனுப்பி வைத்தோம்.

இந்தச் சம்பவம் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் இடம்பெற்றது. மல்லாவி வைத்தியசாலை உடையார்கட்டில் இடம்பெயர்ந்த நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலையும் புதுக்குடியிருப்பில் செயற்பட்டுக்  கொண்டிருந்தது.

இந்தப் பகுதிகள் எல்லாமே அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தன.அந்தத் தற்காலிக வைத்தியசாலைகளை வானில் சுற்றிப் பறந்த வான்படையினருடைய உலங்கு வானூர்திகள் மற்றும் தாக்குதல் விமானங்களில் இருந்தவர்கள் வைத்திய நிலையங்கள் என அடையாளம் காண்பதற்கு வசதியாக கூரைப்பகுதியில் செஞ்சிலுவை அடையாளத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பொறித்திருந்தனர்.

ஆயினும் அந்த அடையாளத்தையும் மீறி உடையார்கட்டு வைத்தியசாலையும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையும் குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணை தாக்குதல்களுக்கும் இலக்காகி இருந்தன. அந்தப் பகுதிகளில் இருப்பது ஆபத்தானது என்ற நிலைமை உருவாகியிருந்தது. அந்தப் பகுதிகளில் வந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடி இடம்பெயர்ந்தார்கள்.

வைத்தியசாலைகளும் இடம்பெயர வேண்டியதாயிற்று. இதனையடுத்தே புதுமாத்தளன் பாடசாலைக்கு 2009 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வைத்தியசாலை நகர்த்தப்பட்டிருந்தது. அன்றிலிருந்து ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை மழையாகப் பொழிந்த எறிகணை தாக்குதல்களுக்கு மத்தியில் பதட்டமான ஒரு சூழலில் அந்தப் பாடசாலை வைத்தியசாலையாகச் செயற்பட்டிருந்தது.

முதலில் அந்தப் பாடசாலையில் இடம்பெயர்ந்த மக்கள் நிறைந்திருந்தார்கள். பாடசாலை கட்டிடங்களில் வைத்தியசாலைக்கு இடமளிப்பதற்காக அந்த மக்களுக்கு வேறிடத்தில் தங்குவதற்கான கூடார வசதிகளை அப்போதைய முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகப் பணியாற்றிய பார்த்திபன் அவர்கள் செய்திருந்தார். இதற்காக அவர் புதுக்குடியிருப்பில் இருந்து நேரடியாக அங்கு வருகை தந்திருந்தார்.

‘வன்னிக்களமுனைகளில் இயங்கிய வைத்தியசாலைகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் சிலரும் பணியாற்றினர்.’

இராணுவம் விடுதலைப்புலிகளுடைய பிரதேசங்களுக்குள் முன்னேறிக் கொண்டிருந்ததனால் வைத்தியசாலைகளும் பொதுமக்களோடு அடிக்கடி இடம்பெயர நேர்ந்திருந்தது.

இந்தச் சூழலில் கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. ஆகவே அவர்கள் அனைவரும் வன்னிப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள், ஐநா பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் அப்போது வெளியேறி இருந்தார்கள்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையும் தாக்குதல்களுக்கு இலக்காகியதையடுத்து, புதுமாத்தளன் பகுதிக்கு வைத்தியசாலை மாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இறுதித் தொகுதியான வெளிநாட்டு வைத்தியர்கள் சிலரும் சர்வதேச செஞ்சிலுவைக் கப்பலில் வன்னியைவிட்டு வெளியேறிச் சென்றார்கள் என்று அந்த முன்னாள் மருத்துவப் போராளி விபரித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைக் கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட அந்த இளைஞனை எங்கே கொண்டு சென்றார்கள்,அவருக்கு எங்கு சிகிச்சையளிக்கப்பட்டது, அவர் சுகமாகினாரா, என்ன நடந்தது என்ற விபரங்கள் எதுவும் வெளி வரவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த அவருடைய சகோதரன் எறிகணை தாக்குதலில் உயிரிழந்த தாய்தந்தையரையும் சகோதரியையும் உடனடியாக வந்து பார்க்க முடியவில்லை.

உயிராபத்து மிக்க அந்தச் சூழலில் அவருக்கு இந்த அனர்த்தம் பற்றிய தகவல்கள் சென்றடையவில்லை. இறந்த உடல்களை புதுமாத்தளன் பகுதியில் அப்போதிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் எடுத்து அடக்கம் செய்திருந்தனர். நாள் கடந்த நிலையில் தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்த அந்த சகோதரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்தது. வன்னியில் யுத்தமுனைகளில் சிக்கியிருந்த பொதுமக்களும் போராளிகளும் வட்டுவாகல் வழியாக இராணுவத்தினரிடம் சென்றடைந்தார்கள். இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் வவுனியா செட்டிகுளம் அகதிகள் முகாமில் அபயமளித்துத் தங்க வைத்தது. பெற்றோரையும் சகோதரர்களையும் இழந்த துயரம் மேலிட்டதனால் உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் நரம்பியல் நோய்க்கு ஆளாகிய நிலையில் செட்டிகுளம் அகதி முகாமில் தனிமைப்பட்டிருந்ததைப் பலர் கண்டிருந்தனர்.

ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு என்ன நடந்ததுஇ அவர் எங்கு சென்றார், இப்போது அவர் எங்கு இருக்கின்றார் என்ற விபரங்கள் எதுவும் எவருக்கும் தெரியாது.
முள்ளிவாய்க்காலின் ஊழிக்கால நிலைமைகள் இவ்வாறு பல குடும்பங்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி உள்ளது.

காயமடைந்தவர்கள் இல்லாத குடும்பமே இல்லையென்று கூறுமளவிற்கு முள்ளிவாய்க்காலில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவயவங்களை இழந்துள்ளார்கள். பல குடும்பங்கள் தமது உற்றவர்களை இழந்துள்ளன. இதனால் பெற்றோரை இழந்த பிள்ளைகளும்இ பிள்ளைகளை இழந்த பெற்றோரும் என பலவாறு பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.

அவர்கள் அந்த முள்ளிவாய்க்கால் துயரத்தில் இருந்து இன்னுமே மீளமுடியாவர்களாகவும் தங்களுக்கு நேர்ந்த இழப்புகளை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள். உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கு வழியின்றிஇ திரள் நிலையில் துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிய பின்னர் அதேபோன்ற திரள் நிலையில் தங்களுக்கு நேர்ந்த இழப்புகளுக்காக ஒன்றுகூடி வாய்விட்டு வருந்தி அழுது ஆற்றிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் பலரும் உண்மையில் நடைப்பிணங்களாகவே நடமாடுகின்றார்கள்.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்து பதினொரு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு உரிய செயற்பாடுகள் இதுவரையிலும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

அவர்களுக்கு நேர்ந்த உறவு நிலை இழப்புகளுக்கும்இ அவர்கள் அகதிகளாக அனுபவித்த அவமானங்களுக்கும் எந்த வகையிலும் உரிய இழப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட அந்த மக்களுக்கு நீதி வழங்கப்படவுமில்லை. பதினனொரு ஆண்டுகளின் பின்னரும் அவர்களுக்கு நிதி கிடைக்குமா என்பதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here