தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக நிராகரிக்கும் சுமந்திரனை வன்மையாகக் கண்டிக்கிறோம் -மக்களவை

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆயுதமேந்திப் போராடியது தவறு என்றும் தான் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் சிங்கள ஊடகமொன்றிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கும்  கருத்தினூடாக தனது கட்சியின் கருத்தை இவர் தெளிவு படுத்தியுள்ளதுடன்  தமிழர்களின் வெறுப்பிற்கும் உள்ளாகியுள்ளார் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் முழு விபரம் வருமாறு:

தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழமையாக தேர்தல் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளைப் புகழ்ந்தும் மக்கள் வாக்குகளைப் பெற்று சிங்கள நாடாளுமன்றம் சென்ற பின்னர் அவர்களை அவதூறாகப் பேசுவதும் தமிழ் மக்கள் மனதில் இக்கட்சியின் மீது வெறுப்பை உருவாக்கியுள்ளது.

ஐந்து வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகக் கூறிப் பெருமைகொள்ளும் சுமந்திரன் சிங்களம் தனக்கு விட்டெறியும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் ஒரு ஆயோக்கிய அரசியல்வாதி என்பதைத் தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்துயள்ளார். சிங்கக்கொடியையும் சிறிலங்காவின் தேசிய கீதத்தையும் ஏற்றுத்தொண்டதாக் கூறும் சுமந்திரன் தமிழர் நிலத்தில் கால்பதிப்பதற்கே அருகதை அற்றவர் என்பதைத் தமிழ்மக்கள் உணரவேண்டும். வாக்குப்பொறுக்கும் நோக்கில் தமிழர் பிரதேசம் வந்து வீரவசனங்கள் பேசுவதையும் மாவீரன் திலீபனில் தூபிக்கு மலர்மாலை சூட்டுவதையும் இனிமேல் தமிழ்மக்கள் அனுமதிக்கக் கூடாது. சிங்களத்துடன் வாழ்ந்தவர் இனியும் வாழ விரும்புபவர் துணிவிருந்தால் அவர்களிடமே வாக்கைப்பெற்று பாராளுமன்றம் செல்லட்டும் பார்ப்போம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதமௌனிப்பின் பின்பு தான் நான் பயமின்றி நிம்மதியாகக் கொழும்பிற்கும் திருகோணமலைக்கும் பயணிக்கின்றேன் என்று மார்தட்டிப் புளகாங்கிதம் அடைந்த சம்பந்தன் கொழும்பில் இருந்து தேடிக் கொண்டுவந்த தமிழரசுக் கட்சியின் விச விழுது தான் சுமந்திரன். தமிழர்களுக்கும் தமிழர்களது நியாயமான அரசியற்தீர்வுக்கும் குந்தகம் விளைவிப்பதற்காகவே சம்பந்தானாலும் மேற்குலகத்தின் அடிமை ரணில் விக்கிரமசிங்கவாலும் திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் தான் இந்த சுமந்திரன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகர் மகாநாட்டில் தேசியத்தலைவர் ஏற்கனவே மீள் பதிவுசெய்த விடயத்தை இங்கு நாம் நினைவுபடுத்தவேண்டும். அதாவது தமிழர்களுக்கு நீதியானதும் சமத்துவமானதுமான ஒரு நிரந்தரத் தீர்வு சனநாயகப் போராட்டத்தால் கிடைக்காத நிலையில் தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் சனநாயகரீதியாக எடுக்கப்பட்ட தனித்தமிழீழத் தீர்மானத்தை நாம் ஆயதமேந்திப் போராடுகிறோம்.

இன்றும் ஈழத்தில் தமது பிள்ளைகளையும் உறவுகளையும் சிங்களத்திடம் தொலைத்துவிட்டு வீதியோரங்களில் கண்ணீரும் கம்பலையுமாக அழுது புலம்பிக்கொண்டு இருக்கும் அந்தத் தாய்மார்களின் நெஞ்சில் எட்டி உதைத்ததைப் போல உள்ளது சுமந்திரனின் இந்த அயோக்கித்தனமான பொறுப்பற்ற செயல்.

நாம் வன்முறையாளர்கள் அல்ல எம்மாலும் சனநாயக நீரோட்டத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற நற்சிந்தனையுடன் காலத்தின் தேவை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு முகத்துடன் செயற்பட்டவர்தான் இந்த சம்மந்தன் என்ற குள்ள நரி. சம்பந்தனின் குள்ள நரித்தனம் தெரிந்தும் தேசியத்தலைவர் சம்பந்தனையே கூட்டமைப்பின் தலைவராக நியமித்தார், காரணம் அன்றைய காலகட்டத்தில் கூட்டமைப்பின் குடுமி தேசிய விடுதலை இயக்கத்தின் கைகளில் இருந்தது. கூட்டமைப்பை வழிநடத்துவது விடுதலைப்புலிகள் தான் என்று மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அன்றே ஒசுலோப் பேச்சுவார்த்தையின்போது ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி சுட்டிக்காட்டத்தக்கது.

1833ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய ஊரிமையானது விடுதலைப் புலிகளின் காலத்தில் மட்டுமே தமிழர்களுக்குத் திரும்பவும் கிடைத்தது. 1915ம் ஆண்டில் இருந்து காலங்காலமாகத் தமிழ்மக்களை இனக்கலவரங்கள் மூலம் பாட்டம் பாட்டமாக இனப்படுகொலை செய்து வந்த சிங்களத்திற்கு முண்டுகொடுத்து நிற்கும் சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும். தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஏன் ஆயுதப்போராட்டத்திற்கு வலிந்து தள்ளப்பட்டார் என்பதை ஆய்வுசெய்யாமல் வாயில் வந்தபடி பொறுப்பற்ற தனமாகப் பேசிய மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும். பொறுப்பற்ற தனமாக நடந்துகொண்ட எம். ஏ சுமந்திரனை தமிழரசுக்கட்சி பதவி நீக்கம் செய்யுமா?

தமிழ் மக்களிற்கு எதிராக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மாபெரும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகம் ஆதாரங்களுடன் முன்நிறுத்தி சிங்கள அரசிற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என குரல்கொடுப்பதற்குப் பதிலாக படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் சிங்கள அரசைப்  பாதுகாப்பதில் ஈடுபட்டு வருவதும் தமிழ் மக்கள் மத்தியில் இக்கட்சியின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தேசியத்தலைவர் பற்றியும் விடுதலைப்போராட்டம் பற்றியும் கூறியுள்ள கருத்துக்கள் சிங்கள பேரினவாதத்திற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளதுடன் தமிழ் மக்களிற்கெதிராக சிங்கள அரசு மேற்கொண்டுவரும் இனவழிப்பினை வெளிக்கொண்டுவருவாதாக இல்லை.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களால் தெரிவுசெய்யப்படும் நிலையேற்பட்டால் இனப்பிரச்சினைக்கான தீர்வும் கிடைக்காமல் எமது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை நீத்த பல்லாயிரம் மாவீரர்களினதும் பொதுமக்களினதும் கனவும் இழப்பும் விணாகிவிடும். ஆகவே மிக விரைவில் நாடாளுமன்றத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் எமது இறையாண்மைக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் எதிராகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் நிராகரித்துத் தூக்கியெறிவதே எமது விடுதலைக்காக வித்தான மாவீர்களுக்கு தமிழர் செய்யும் பெரும் மரியாதையாக அமையும்.

-தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்-
–அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –