அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கேட்கும் சிறீலங்கா அரசு

சிறீலங்கா ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர எழுதியுள்ள மற்றுமொரு கடிதமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் கடிதம் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பட்டிருக்கின்றது.

அரச ஊழியர்கள் அனைவரும் மே மாத சம்பளத்தை அரசாங்கத்திற்கு  உதவியாக வழங்க  வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கேட்டிருக்கின்றார்.  இதுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்றும் தேர்தல் ஆணையகமே தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அவர் முன்னர் எழுதிய இரண்டு கடிதங்களும் அரசியலமைப்புச் சட்ட ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

அரச ஊழியர்களிடம் நிதியுதவி கேட்டிருப்பதை எதிர்க்கட்சியினர் எதிர்த்திருக்கின்றார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கையாள முடியாத அரசாங்கத்தின் கையாலாகாதத் தனத்தையே இது காட்டுகின்றது என்று அவர்கள் சாடியிருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் நாட்டின்  பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதனைத் தட்டி நிமிர்;த்தி தூக்கி விடுவதற்கு அரச ஊழியர்கள் உதவ வேண்டும் என்பது ஜயசுந்தரவின் கோரிக்கை.

நாட்டில் ஒன்றரை மில்லியன் அதாவது 15 லட்சம் அரச ஊழியர்கள் பணிபுரிகின்றார்கள். அரச படையினர் பொலிசார் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களும் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும். அது முடியாவிட்டால் ஒரு வாரம் அல்லது ஒரு நாள் சம்பளத்தையாவது தந்து உதவலாம் என்று ஜனாதிபதியின் செயலாளருடைய கடிதம் கூறுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் மாதம் 20 ஆம் திகதி தேசிய அளவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டது. உணவு மருந்து விநியோகம் உட்பட அனைத்துச் செயற்பாடுகளும் தடைபட்டன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. வர்த்தக நடவடிக்கைகள் முடங்கின. போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 279 பேர் பலியானார்கள். உல்லாசத்துறை பாதிக்கப்பட்டது. அந்த பொருளாதாரப் பாதிபில் இருந்து மீள்வதற்கிடையில் கொடிய கொரோன வைரஸ் நாட்டைத் தொற்றிக் கொண்டது.

ஒன்பது பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். கிட்டத்தட்ட 800 பேர் வரையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். இன்னும் கொரோனாவின் வேகம் தணிவதாகத் தெரியவில்லை. உதவிகளுக்காக வெளிநாடுகளை நாடலாம். அதேநேரத்தில் உள்நாட்டில் எங்களுடைய பலத்தையும் காட்ட வேண்டும். ஆகவே இந்த நெருக்கடியான தருணத்தில் உங்களுடைய சமூகப் பொறுப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்று ஜயசுந்தர அரச ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்திற்கு 100 பில்லியன் ரூபா கிட்டத்தட்ட 525 மில்லியன் டொலர் செலவாகின்றது. சமூக பொறுப்புணர்வுடன் அரச ஊழியர்கள் முன்வந்தால், நாட்டின் வரவு செலவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைத் தணிக்க இந்தப் பணம் கைகொடுக்கும் என தெரிவித்துள்ள ஜயசுந்தர தனது மே மாதச் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களிடம் நிதியுதவி கோரியுள்ளதன் மூலம் அரசு தனது இயலாமையை ஒப்புக் கொண்டிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா இன்று காலை செய்தயாளர்களிடம் கூறியிருக்கின்றார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கொடையாகக் கேட்டிருப்பது, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உறுதியான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதைக் காட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் இருந்தே அரசு கொரோனா வைரஸ் பரவல் குறித்து கவனம் செலுத்தவில்லை. என்று இங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனவரி பெப்ரவரி மாதங்களிலேயே கொரோன வைரஸ் பரவல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். ஆனால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதனை ஒரு வேடிக்கைப் பேச்சாக எடுத்திருந்தார். ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் குறித்து கவனமெடுக்கத் தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது, கொரோனா வைரஸ் தாக்கத்தைப் போலவே நாட்டையும் நாட்டு மக்களையும் சிக்கலுக்குள் ஆழ்த்தப் போகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன.