நாடாளுமன்றம் செயற்படாதது மக்களின் இறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது

மூன்று மாதங்களாக நாடாளுமன்றம் செயற்படாதது மக்களின் இறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவே அரசமைப்பின் பிரிவுகளின் அடிப்படையில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் முடிவிற்கு எதிராகவும்,நாடாளுமன்ற தேர்தலை யூன் 20 ம் திகதி நடத்தும் தேர்தல் ஆணையகத்தின் முடிவிற்கு எதிராகவும் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளது.

மாற்றுக்கொள்கை நிலையமும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் ஜனாதிபதியினதும், தேர்தல் ஆணையகத்தினதும் நடவடிக்கைகளிற்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கொவிட் 19 இலங்கை முழுவதிலும், உலகளாவிய ரீதியிலும் பரவி வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி மார்ச் இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்தார் என மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் 19 துரிதமாக பரவியதன் காரணமாக தேர்தல் ஆணையகம் தேர்தலை ஒத்திவைத்த பின்னர் யூன் 20 திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

நாடாளுமன்றத்தை கலைப்பதை அறிவித்துள்ள வர்த்தமானி தொடர்ந்து நீடிக்கின்ற நிலையில் புதிய நாடாளுமன்ற தேர்தலிற்கான திகதியை யூன் இரண்டாம் திகதிக்கு அப்பால் தீர்மானிக்க முடியாது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் எவ்வாறு கலைக்கப்பட்டாலும் அது மூன்று மாதத்திற்குள் கூட்டப்படவேண்டும் என்ற கட்டாய காலஅவகாசத்தினை அரசமைப்பு வழங்கியுள்ளது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்தது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கை என அனுமதிக்கப்பட்டால்.இது புதிய நாடாளுமன்றம் யூன் இரண்டாம் திகதி கூடுவதை கட்டாயமானதாக்கின்றது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக யூன் 20 திகதி தேர்தலை நடத்தும் முடிவு அரசமைப்பிற்கு முரணானது எனவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நெருக்கடி சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ள மனுதாரர்கள் சுகாதார ரீதியிலான ஆபத்துக்கள் தேர்தல் பிரச்சாரத்தையும், மக்களின் வாக்களிப்பையும் பாரதூரமான முறையில் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமூக விலக்கலை கடைப்பிடிப்பது கடினம்,இதன் காரணமாக வைரஸ் ஆபத்து அதிகமாகும் எனவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தேர்தல் யூன் 20 இடம்பெறாமல் ஒத்திவைக்கப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதங்களாக நாடாளுமன்றம் செயற்பாடதது மக்களின் இறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள மனுதாரர்கள் அரசமைப்பின் பிரிவுகளின் அடிப்படையில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.