சேமிப்புப் பண்பாடும் அதன் செயலிழப்பும் – து.கௌரீஸ்வரன்

765
332 Views

கொரொனா பேரனர்த்தம் நம்மை ஆக்கிரமித்துள்ள இன்றைய சூழலில் சில வாரங்கள் ஊரடங்குச்சட்டத்திற்குள் வாழ வேண்டிய நிலைமைகளின் பின்னர் நம்மிடையே இல்லாமை பற்றிய செய்திகளும், கையேந்தி நிற்கும் மனிதர்களின் காட்சிகளும் ஊடகங்களில் பிரதானம் பெறுவதாகியுள்ளன.

இந்நிலையில் பரிதவிப்போருக்கு கருணையுள்ளங்காட்டுமாறு கோருதலும் அத்தகைய நடவடிக்கைகளில் கணிசமானவை தெரிந்தும் தெரியாமலும் விளம்பரங்களாக விரிவாக்கம் பெறுதலும் நடந்தேறுவதைக் காண்கின்றோம். தற்போதைய நிலையில் இல்லாதோருக்கு உதவுதல் உடனடியான தேவை என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் சவால்களை எதிர்கொண்டு மீண்டெழுவதற்கான தூரநோக்குடன் இத்தகைய நிலைமைகள் வலுப்பெற்றதற்கான காரணங்களை ஆராய வேண்டியது அவசியமாக உணரப்படுகின்றது.

இந்தவகையில் நமது பலமாக இருந்துவந்த சேமிப்புப் பண்பாடு தொடர்பாகவும் அது பலவீனமடைந்தமைக்கான காரணங்கள் குறித்தும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமான தேவையாகியுள்ளது. சேமிப்புப்பண்பாட்டிற்குரிய பொறிமுறைமைகளின் செயலிழப்பே நமது சமூகங்களை பேரனர்த்தக் காலங்களில் கையேந்தும் நிலைமைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

நமது நாளாந்த உணவு தயாரிப்பின் போது அன்றைய நாளுக்காக ஒதுக்கப்படும் உணவுப்பொருட்களிலிருந்து சிறிதளவை எடுத்து அடுத்த நாளுக்காகச் சேமித்து வைக்கும் பண்பாட்டுக்குச் சொந்தக்காரராக நாம் வாழ்ந்து வந்தவர்கள். ஆனால் இந்தப் பண்பாடும் பழக்கவழக்கமும் எவ்வாறு நம்மிடமிருந்து விலகிச் சென்றன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது.

கையில் பணமிருந்தால் எதையும் எந்த நேரத்திலும் எங்கேயும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நுகர்வு மனப்பாங்கினை வலுப்படுத்திய திறந்த பொருளாதாரமும் நகரமயமாக்கமும் நம்முடைய சேமிப்புப் பழக்கத்தை மெல்ல மெல்லச் சாகடிக்கச் செய்துள்ளன. இதன்காரணமாக நம்முடைய பாரம்பரியமான தொழில் முறைகளும் விளைச்சலில்,உற்பத்தியில் பங்கு வழங்குதலிலிருந்து விடுபட்டு பங்கிற்குப் பதிலாக பணத்தை வழங்குதலாக பரிமாணமடையும் நிலைமைக்குச் சென்றுள்ளது.

உதாரணமாக விவசாயத்தில் பங்குபற்றும் வேலையாட்களுக்கு வழங்கப்படும் வேதனத்தின் ஒரு பகுதியான தானியப்பங்கீடு குறைவடைந்து அதற்குப்பதிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ளுதலாக மாற்றமடைந்தது. இதனால் நமது வீடுகளில் தானியம் மற்றும் உணவுப் பொருட்களின் சேமிப்பு இல்லாமலே ஆகிவிட்டது.

துரித நகரயமாக்கமும் அந்நகரங்களுக்கு என்று அளவுக்கு மீறி அதிகமடைந்த மதுபான விற்பனை அனுமதிகளும் பாரம்பரியமான விவசாயத்தின் சேமிப்பிற்குரிய தானியங்கள் பணமாக மாற்றப்பட்டு பானமாக சமிபாடடையச்செய்வதற்கான மனப்பாங்கை மேலும் மேலும் வலுப்படுத்தின.

நமது பாரம்பரியத் தொழில் முறைகளில் உபரி உற்பத்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை வைத்து உப உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. உதாரணமாக கரைவலைப் பருவ காலத்தில் அதிகளவான மீன்கள் கிடைக்கும் போது மேலதிகமானவற்றை கருவாடாக ஆக்கி அதற்கான தேவை வரும் போது பயன்படுத்தும் பண்பாடு மீனவ சமூகங்களின் பாரம்பரிய சேமிப்புப் பண்பாடாக இருந்து வந்தது.

ஆனால் திறந்த பொருளாதாரமும் தரகு வணிகமும் நிபந்தனைகளுடன் உற்பத்திகளை ஒரேயடியாக பணங்கொடுத்து மிச்சம்மீதியில்லாமல் வாரியள்ளிச்சுருட்டி குளிரூட்டிகளில் கொண்டு செல்லும் நிலைமைகளையே வலுப்படுத்தியுள்ளமையால் மீனவ சமூகங்களின் சேமிப்புப் பண்பாடு சீர்குலைந்தது.

இத்தோடு கடலுக்குப் போக முடியாத இயற்கை அனர்த்த காலத்தில் மீனவ சமூகத்தினரே கடைகளில் கருவாடு வாங்கும் நிலைமைகளுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த தசாப்தங்களில் போர்மேகம் சூழ்ந்திருந்த இருண்ட நாட்களில் ஒரு வேளை உணவுக்காக தம்மிடமிருந்த இறால்கருவாடுகளையும், கீரிக்கருவாடுகளையும் வயல்சார்ந்த பகுதிகளிலிருந்த விவசாயிகளிடம் கொடுத்து அதற்குப் பதிலாக நெல்லைப்பெற்று வந்து வயிராறச் சாப்பிட்ட கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

மேலும் மரபணுமாற்றம் செய்யப்பட்டு குறுகிய காலத்தில் கூடிய விளைச்சல் தருபவை எனும் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நமது விவசாயத்தில் ஆக்கிரமிப்புச் செய்துள்ள விதையினங்களின் வருகையும் நம்மிடமிருந்த தானியச் சேகரிப்பினை செயலிழக்கச் செய்து விட்டன. உதாரணமாக வருடாந்தம் சோளன் செய்த பின்னர் அதன் அறுவடையில் ஒரு பகுதியை அடுத்த விளைச்சலுக்காகச் சேமித்து வைக்கும் நடைமுறை பெரும்பாலும் இல்லாமலே ஆகிவிட்டது. அதாவது சோளனை முற்ற விடுவதில்லை. முற்றிய சோளனில் மேலதிகமானவை அனர்த்தக் காலங்களில் மாவாக்கப்பட்டு பசிதீர்த்த கதைகள் இப்போது நினைவு கூரப்படுகின்றன.

இவ்விதமாக பல்வேறு பொறிமுறைகளுடன் நம்மிடம் இருந்து வந்த உணவுப் பொருட்களின் சேமிப்புப் பண்பாடு திடீரென உருவாகும் அனர்த்த காலத்தில் ஏற்படும் உணவுத்தட்டுப்பாட்டைத் தாக்குப்பிடிக்கும் நிலைமைகளை வலுப்படுத்தி வந்தன. இதனால் நமது சமூகத்தினர் எப்பேர்ப்பட்ட அனர்த்தங்களின் போதும் பெரும்பாலும் பிறரிடம் கையேந்தாமல் வலிமையானவர்களாக வாழ்ந்தனர் என்கிறார்கள் ஆய்வாளர்.

எனவே! கொரொனா பேரனர்த்தம் நம்மிடமிருந்த சேமிப்புப்பண்பாட்டின் வலிமைகளை நமக்கு இடித்துரைத்து நிற்பதுடன் அது சீர்குலைந்தமைக்கான காரணங்களையும் தேடி ஆராய வைத்துள்ளது. முடிவாக கொரொனாவிலிருந்து மீண்டெழுதல் என்பது நமது சேமிப்புப் பண்பாட்டின் பொறிமுறைகளையும் மீளுருவாக்கிக் கொண்டு வருதலாக இருக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here