வயதானவர்களை 2021 வரையிலும் தனிமைப்படுத்த முயற்சி

கோவிட்-19 வைரசில் இருந்து தம்மை பாதுகாக்க வேண்டுமெனில் வயதானவர்கள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உசுலா வொன் டெர் லெயன் இன்று (12) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனின் ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வைரசில் இருந்து எம்மை பாதுகாப்பதற்குரிய தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்கு ஒரு வருடம் எடுக்கும் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே அதனை பெறும் வரை நாம் வயதானவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தனிமைப்படுத்துவது கடினமானது என்பதை நான் அறிவேன் ஆனால் இது வாழ்வா அல்லது சாவா என்பதை தீர்மானிக்கும் முடிவு. எனவே நாம் ஒழுக்கமாகவும், அமைதியாகவும் இருத்தல் வேண்டும். இந்த வருடத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆய்வுகூடங்கள் இந்த மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையை கையாள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் தலைவர் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.