கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

282
121 Views

இலங்கைத் தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல. வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும், செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர் கொள்ளாததுடன் அதனால் வரும் போசாக்கின்மையால் பாதிக்கப்படாதவர்களாகவும் இலங்கைத் தீவின் மக்கள் கடந்த கால வரலாற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

தசாப்தகால உள்நாட்டுப் போர் நடைபெற்ற உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்படாத மக்களைக் கொண்ட நாடாக இலங்கைத் தீவு தன்னை அடையாளப்படுத்தியது. இவ்வாறு கடந்த காலத்தில் அனர்த்தங்களின் போது பட்டினியையும் அதனால் வரும் போசாக்கின்மையையும் எதிர்கொள்ளாது இருந்தமைக்கு இலங்கைத்தீவில் வலுவாக இருந்த உள்ளூர்ப் பொருளாதார மூலங்களே அடிப்படையாக இருந்தது என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.

மதில் கட்டப்படாமல் மரங்கள், செடிகள், கொடிகளுடன் காணப்பட்ட வேலிகளும், மண்மூடி நிரப்பப்படாதிருந்த உள்ளூர்த் தோணாக்களும் அவற்றினை அண்டி வளர்ந்த தென்னை, பனை மரங்களும், சிறு சிறு தாழ்வான நிலப்பகுதிகளும், சதுர்ப்பு நிலங்களும் கண்டல் காடுகளும், சிறு சிறு பற்றைக் காடுகளும் பல்வேறு இலை குழைகளையும், நீர் வாழ் அங்கிகளையும் பல்கிப் பெருகச் செய்ததுடன், அனர்த்த காலங்களில் போசாக்கான உணவுத் தேவையினை ஈடு செய்யவும் வாய்ப்பினை வழங்கியிருந்தன. இவை உள்ளூர் மருத்துவத்திற்கான மூல வளங்களையும் வழங்கி வந்தன.

பெரும்பாலும் இயந்திரமயப்படுத்தப்படாது உள்ளூர் மனித வளத்தைப் பிரதானமாகக் கொண்டு இயக்கம் பெற்று வந்த வேளாண்மைச் செய்கையானது, அவ்வுற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரதும் வீடுகளில் நெல்லரிசியின் சேமிப்பினை உறுதிப்படுத்தியது. இதனால் எப்பேர்ப்பட்ட அனர்த்தங்களின் போதும் பட்டினியை எதிர்கொள்ளாது நமது நாட்டின் மக்கள் வாழ முடிந்தது.

தேங்காய்ச் சம்பலோடோ அல்லது கீரைச் சுண்டலோடோ மூன்று வேளையும் சாப்பிடும் நிலைமையினை இந்த உள்ளூர் வளங்கள் வலுவாக்கியிருந்தன.

இன்று கொரோனா வைரசின் தாக்கம் நம்மை வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. முடங்கிய சில தினங்களிலேயே உணவு இருப்பு பற்றிய பிரக்ஞை எம்மை பீதி கொள்ளச் செய்யத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாம் எமது உள்ளூர்ப் பொருளாதார வளங்கள் பற்றியும் அவற்றினை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான கூட்டுறவு வாழ்வியல் முறைமைகள் குறித்தும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. அதாவது ஊரில் கிடைக்கும் வளங்களைப் பகிர்ந்துண்ட பாதீட்டுப் பண்பாடு பற்றியும் அவற்றின் மீளுருவாக்கம் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.

அதேவேளை நவீன நகரமயமாக்கமும் அதனோடிணைந்த நுகர்வுப் பொருளாதாரமும் அனர்த்த காலங்களில் எந்தளவு சாதகமானது என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டிய தேவைகளையும் எழுப்பியுள்ளது. இத்துடன் நகரமயமாக்கலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் செயற்பாடுகள் எந்தளவு நிலைபேறான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக் கூடியது என்ற கேள்விகளையும் கேட்க வேண்டியுள்ளது.

காலனித்துவ ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட நவீனமயமாக்கத்தின் காரணமாக மெல்ல மெல்ல வளங்களைப் பகிர்ந்துண்டு வாழ்ந்து வந்த நமது உள்ளூர்ப் பொருளாதார வாழ்வியல் முறைமைகளும் அவற்றின் பொறிமுறைமைகளும் வலுக்குன்றச் செய்யப்பட்டு நிரந்தரச் சந்தையான நகரங்கள் உருவாக்கப்பட்டன. இந்நகரங்களை பிரதானப்படுத்திய நுகர்வுப் பண்பாடு வளர்த்தெடுக்கப்பட்டது.

துரித நகரமயமாக்கல் காரணமாக உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஆதாரங்களாக விளங்கிய சிறு காடுகள், சிறிய சதுப்பு நிலங்கள், சிறு சிறு குளங்கள் என்பன கவனத்திற்கொள்ளப்படாமல் இல்லாமலாக்கப்பட்டன. இதனால் உள்ளூர் கிணறுகளில் இயற்கையாக வடிகட்டப்பட்டு வரும் நீர்வளம் குறைவடைந்தது. காலப்போக்கில் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைமை உருவாக்கப்பட்டது.

நமக்கான குடிநீரும் எரிவாயுவைப் போல வெளியிலிருந்தே வரும் நிலைமை வளர்ந்துள்ளது. அனர்த்த காலங்களில் போக்குவரத்தும், நகரங்களும் முடக்கப்படும் போது அடிப்படைத் தேவையான குடிநீரும் முடங்கி விடும் நிலைமை வலுவாகியுள்ளது.

இச்சூழலில் நமது வளவுகளில் வற்றாத கிணறுகளை வைத்திருப்பதற்கான நிலவியல் பண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதாவது சிறு மடுக்களாகவும், குளங்களாகவும், குட்டைகளாகவும், பள்ளங்களாகவும், சதுப்பு நிலங்களாகவும் ஊர்கள் எங்கும் இயற்கை தந்துள்ள நிலவியலைப் பாதுகாத்து புதிய குடியிருப்புக்களை அமைப்பதில் நாம் கவனஞ் செலுத்த வேண்டும்.

இத்தோடு நமது குடியிருப்புக்களில் முருங்கையும், தூதுவளையும், முடக்கொத்தானும், இலட்சகட்டையும், முல்லையும், முசுட்டையும், மான்பாய்ஞ்சானும், குறிஞ்சாவும், அவரையும், பாகலும், நாடையும், பீர்க்கும், புடோலும் என நமது அன்றாட உணவுத் தேவையில் முக்கிய பங்கு வகித்த செடிகளும் கொடிகளும் செழித்து வளர்ந்த வேலிப்பண்பாடு இல்லாமலாகியது.

இன்று அனர்த்த காலத்தில் ஊரடங்கு வேளையில் வீடுகளுக்குள் முடங்கியிருந்து நோய் எதிர்ப்புச் சக்திகளை வழங்கவல்ல உள்ளூர் உணவுகளை உண்ண வேண்டிய தேவை உணரப்படும் காலத்தில் நமது வேலிப் பண்பாட்டினை ஞாபகத்தில் கொண்டு வருகின்றோம்.

கடந்து போன போர்க் காலங்களில் நாம் வீடுகளில் முடங்கி வாழ்ந்த நாட்களில் போசாக்கான உணவுகளைப் பெற அன்றிருந்த வேலிப்பண்பாடு நன்கு உதவியிருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் துரிதமடைந்த நகரமயமாக்கம் நமது வேலிப்பண்பாட்டையும் அதன் பயன்பாடுகளையும் கவனத்திற் கொள்ளாமல் கட்டிட நிருமாணத்தை வளர்த்தெடுத்தது.

பெருவெள்ளம் வரும் போதும் தொற்று நோய்கள் பரவும் போதும் நாம் நமது வேலிப்பண்பாட்டை மீள ஞாபகப்படுத்துகின்றோம். இது இனிவருங் காலத்தில் கடந்து சென்ற பண்பாடாகவன்றி நகரமயமாக்கத்தில் பசுமை வேலிப்பயன்பாடு எனும் திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.

நமது உள்ளூராட்சி சபைகள் கிராம, நகர திட்டமிடல்களின் போது பசுமை வேலிப்பண்பாட்டையும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.

கொரோனா அனர்த்தம், உல்லாசப் பயணத்தைப் பிரதானப்படுத்தி உள்ளூர் வளங்களைக் கையாண்ட முறைமையில் மாற்றங்கள் தேவை என்பதை இடித்துரைத்து நிற்கின்றது. நமது உள்ளூர் வாவிகளை உல்லாசப் பயணிகளுக்கான அம்சமாக கருதி நடவடிக்கைகளை மேற்கொண்ட போது உள்ளூர் மீனவர்கள் தெரிவித்த கருத்துக்களைச் செவிமடுக்காமல் இருந்ததன் பிரதிகூலம் தற்போது வெளித் தெரிகின்றது.

அதாவது. “சீ பிளேன் அதிக சத்தத்துடனும் அதிக விசையுடனும் ஆத்துக்குள்ள அதுவும் மீன் பெருகும் கல்லுகள் உள்ள பகுதியில் வருவதால் மீன் பெருகுவது குறைகிறது என்று உள்ளூர் மீனவர்கள் ஆதங்கப்பட்ட போது டொலரும் யூரோவும் வருகிறது இதுதான் பொருளியல் மாற்றம் பொருளாதார வளர்ச்சி என்று நியாயம் கூறினோம். ஆனால் இன்று சீ பிளேனும் வரவில்லை டொலருமில்லை, யூரோவுமில்லை ஆத்துல மீனும் குறைஞ்சித்து. ஊராக்களுக்குச் சாப்பாடுமில்லாத நிலைமை வந்துள்ளது” இந்த அனுபவங்களை கருத்திற் கொண்டு நமது கடந்தகால உல்லாசப் பயணத் தொழிற்துறையினை மையப்படுத்திய அபிவிருத்திச் செயற்பாடுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையினை கொரோனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.

பணத்தை அல்லது மூலதனத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல் எனும் பொருளாதார கருத்தியல் ஆதிக்கம் பெற்று கிருமிநாசினிப் பாவனைகளையும், இயந்திரமயமாக்கலையும், பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த விவசாய உற்பத்தி முறைமைகள் குறித்தும் பொருத்தமற்ற மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி நீர்வாழ் அங்கிகளின் இருப்பினை அச்சுறுத்தி வரும் நவீன தொழில் நுட்பப் பிரயோகங்கள் குறித்தும் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவையை கொரோனா அனர்த்தம் உருவாக்கியுள்ளது.

அதாவது நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல நமது வேளாண்மை உற்பத்திச் செயற்பாட்டில் மனித வளத்தை பிரதானமாகக் கொண்டமைந்த உற்பத்தி முறைமை இருந்த போது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட மனிதர்களின் வீடுகளில் உணவுக்குத் தேவையான நெல்லரிசியினைச் சேமிக்கும் பண்பாடு வலுவாக இருந்தது.

புல்லுப் பிடுங்குதல், வேளாமை வெட்டுதல், சூடுமிதித்தல், கதிர் பொறுக்குதல் என நமது சமூகத்தின் மனிதர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்கான உணவுச் சேமிப்பு பொறி முறைமை பேணப்பட்டு வந்தது. பொருளாதாரத் தடையுடன் போர் நடந்த போதும் நமது சமூகத்தினர் பட்டினி என மடிந்து போகாமலும் யாரிடமும் அன்றாட உணவுக்காகக் கையேந்தாமலும் வாழ்வதற்கான உணவு இருப்பினை நமது வேளாண்மை உற்பத்தி முறைமை வலுப்படுத்தி வந்தது.

ஆனால் பின்னர் வந்த இயந்திரமயமாக்கல் நமது வேளாண்மை உற்பத்திப் பொருளாதாரத்தின் சமூக பண்பாட்டு அம்சங்களைக் கவனத்திற் கொள்ளாமல் பணமீட்டல், இலாபப் பெருக்கம் எனும் நவீன பொருளியல் சமன்பாட்டை மாத்திரம் கவனத்திற் கொண்டு அதற்குச் சாதகமான கதைகளுடன் வளர்த்தெடுக்கப்பட்டதால், இன்று ஓர் அனர்த்த காலத்தில் விவசாய சமூகங்களே ஒருநாள் உணவுக்காக அவஸ்தைப்படும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.

கொரோனாவால் உலகமே முடங்கியுள்ள காலத்தில் நமது வேளாண்மை உற்பத்தி முறைமையில் மனிதப் பங்குபற்றுதலால் ஏற்பட்டு வந்த சாதகங்கள் பற்றிய கவனிப்புத் தெரிய வருகின்றது. எனவே நவீன தொழில் நுட்பங்களை பிரயோகத்திற்குக் கொண்டு வரும் போது நமது பண்பாட்டின் நிலைமைகளுக்கேற்ப ஆராய்ந்து திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை கொரோனா நமக்குக் கற்றுத் தந்துள்ளது.

கொரோனா நமது வைத்தியத் துறையில் நாம் உள்ளூர் வைத்திய முறைமைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலுவாக உணர்த்தி நிற்கின்றது. இன்று கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களை மட்டுமே கவனிக்க முடியாதளவிற்கு சில மேற்குலக நாடுகள் தமது மருத்துவத் துறையின் சகல சக்தியையும் ஒன்று திரட்டியும் முடியாதவாறு திண்டாடும் அனுபவங்களின் பின்புலத்தில் நம்மிடையே பெரும்பாலும் துறைசார் நபர்களின் தன்னார்வம் ஒன்றையே மையமாகக் கொண்டு உயிர்ப்புடன் இருந் துவரும் விசக்கடி வைத்தியம், முறிவு வைத்தியம், மருத்துவிச்சிப் பாரம்பரியம், கட்டு வைத்தியம் முதலிய வைத்திய முறைகளை நாம் மதித்து அவற்றின் பெறுமதிகளை உணர்ந்து அவற்றை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தொற்று நோய் அனர்த்தம் ஒன்று வரும் போது அந்நோயை பிரதானப்படுத்தி மருத்துவத் துறை இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும் போது ஏனைய நோயாளர்களைக் கவனிக்கவே முடியாத பரிதாபம் உருவாகும் போது நமது பாரம்பரியமான உள்ளூர் மருத்துவர்களும் அந்த மருத்துவ முறைகளும் அந்த ஆபத்தான இடைவெளியை ஈடு செய்யும் வல்லமை உள்ளவர்களாக இயல்பாகவே இயங்குவார்கள் என்பதை நாம் தற்போது உணர முடிகின்றது.

எனவே முடிவாக இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரசின் தாக்கங்களும் அது தரும் படிப்பினைகளும் நீண்ட பாரம்பரியங்களைக் கொண்ட மனித சமூகம் என்ற வகையில் நாம் எமது கடந்த கால வாழ்வியல் முறைமைகள் குறித்தும், அவை பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டும் முன்செல்வதற்கான வெளிகளைத் திறந்துள்ளது எனலாம்.

குறிப்பாக காலனித்துவமும் நவீனமயமாக்கமும் மூடநம்பிக்கைகள், காலத்திற்கு ஒவ்வாதவை எனத் தட்டிக்கழித்த நமது உள்ளூர் பொருளியல் பண்பாடுகள் குறித்தும், நமது உள்ளூர் அறிவு முறைமைகள் பற்றியும் கவனத்திற் கொண்டு நமது எதிர்கால வாழ்வியல் முறைமைகளை வடிவமைப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன எனலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here