21 நாள் ஊரடங்கால் பாதிக்கப்படும் இந்திய மக்களின் பொருளாதாரம்-கல்யாணி 

192
191 Views

உலகில் உள்ள அனைவரும் அச்சப்படும் ஓர் விடயமாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இது இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறப் பண்ணியதுடன், பொது மக்களை பெரும் இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது. கொரோனா பரவுவதைத் தவிர்ப்பதற்காக மக்களை தனிமைப்படுத்துதல் என்ற நடைமுறைக்கு அமைய பல நாடுகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்களை வீடுகளிற்குள் முடக்கியுள்ளது.

இந்தியாவிலும் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மார்ச் மாதம் நள்ளிரவு 12மணிக்கு நடைமுறைக்கு வந்த ஊரடங்குச் சட்டமானது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பானது மக்களை புரட்டிப் போட்டுள்ளது. அத்துடன் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கமைய மக்களின் அன்றாட தேவைகளுக்காக  வீட்டிற்கு வெளியில் சென்று வரலாம் என்பது நடைமுறை. இதனால் காய்கறி சந்தைகள், பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம்  அதிகமாக உள்ளது.  இதனால் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருக்கின்றது.

மேலும் இந்த ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அரசாங்கம் சம்பளங்களை வழங்குகின்றது. அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறமுடியாது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஐ.ரி.நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதேபோல், வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. ஐ.ரி. நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வேறு நிறுவனப் பணியாளர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றாடம் உழைத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றும் பொது மக்கள் இந்த ஊரடங்குச் சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பொது நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து தொழிற் சாலைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.  இந்த நிலையில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 21 நாள் முடக்க அறிவிப்பால் இந்தியா முழுவதும் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், நிறுவன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர் ஒருவர் செலவுகளை சமாளிக்க முடியாது கடந்த 25ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் ஆந்திர மாநிலத்தில் நோயுற்று இறந்த தனது 8 வயது மகனை பணம் இல்லாத காரணத்தினால் அவரின் தந்தை தூக்கிச் சென்று மயானத்திற்கு சென்ற பதிவுகளும் இடம்பெற்றுள்ளது.

மேலும் அன்றாடம் வேலை செய்து தங்களின் குடும்பங்களை பராமரித்து வந்த சிறிய வியாபாரிகள், சிறிய கடை வைத்திருப்போர் தங்களின் அன்றாட வருமானத்தை இழந்துள்ளனர்.

அத்துடன் இந்தியாவில் கோவில்களே அதிகம் காணப்படும். தற்போது கோவில்கள், வணக்க ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுவதில்லை. எனவே பூந்தோட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அறுவடைகளை தற்போது வெளியில் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதால், அவற்றை கால்நடைகளுக்கு உணவாக்குகின்றனர். இது அவர்களை இலட்சக் கணக்கான ரூபாய்களை இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.கோவில்களில் பூசை செய்யும் அட்சகர்கள் தங்களுக்கான வருமானத்தையும் இழந்துள்ளனர்.

அத்துடன் கோவில்களில் பிச்சை எடுப்பவர்களின் தொகை தமிழ்நாட்டில் அதிகம். தற்போதைய 144 தடை உத்தரவையடுத்து, அவர்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு சேவை அடிப்படையில் உணவு வழங்கி வரும் மனிதாபிமான தொண்டர்களையும் உணவு வழங்க வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால், இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்கள், உணவு விடுதிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. எனவே இவற்றில் வேலை செய்த பணியாளர்கள், உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் ஊர்களுக்கு மீண்டும் செல்ல முடியாத நிலையில் இருப்பதுடன், அவர்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உணவகங்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க,  தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர், வெளிநாட்டவர்கள் வந்து தங்கி இருக்கும் தங்கும் விடுதிகள் (Guest house)  வைத்திருப்பதுடன், அவர்களுக்கான போக்குவரத்து, மற்றும் உணவு வழங்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இதுவே அவர்களுக்கான வருவாயாக அமைந்துள்ளது.  ஆனால் தற்போது வெளிநாட்டிலிருந்து எவரும் வருவதில்லை. இதனால் அவர்கள் தங்களின் வருவாயை முற்றிலுமாக இழந்துள்ளனர்.

இருந்தும் அவர்கள் நடத்தி வரும் விடுதிகளுக்கான மாதாந்த வாடகையை வீட்டின் சொந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இது அவர்களை பெரிதும் பாதித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலுள்ள உறவினர்களின் வருவாயை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது வெளிநாட்டவரே தங்களின் பொருளாதாரங்களை இழந்து அல்லாடும் அதேவேளை, அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையிலும் உள்ளனர். எனவே இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் நிலை பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த நிலை ஒரே மாதிரியானதாக இருந்த போதும், இந்தியாவில் வாழும் மக்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தொகை அதிகம். உலகில் உயர்ந்த பணக்காரர்களும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர். அதேபோல் மிக வறுமையான ஏழைகளும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர்.

இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் பரவாயில்லை, தனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here