ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி 

218
183 Views

நாம் பலரானாலும் ஒன்றே… உலகெங்கும் இருந்திங்கு வருகிறோம்… எம் கனவை ஒரு குரலில் பாடுகிறோம்…நீயும் நானும் நாமும் அவுஸ்திரேலியர்களே

பிலொ-ஈலா கும்பத்தின் ஒரு ஆதரவாளர்

நடேசும் பிரியாவும் அகதி தஞ்சம் கோரி கடல்வழியாக வெவ்வேறு காலத்தில், 2012இலும் 2013இலும், அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள். இங்குதான் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கோபிகா தர்சிகா என்ற இரு பெண் குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டது.

அகதிக்கான ஒரேயொரு நேர்காணல் மட்டுமே தன்னிடம் எடுக்கப்பட்டதாக பிரியா சொல்கிறார். அதுவும் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தொலை பேசியில் எடுக்கப்பட்டது. அப்போது தொலைபேசி தொடர்பும் இடையிடை துண்டிக்கப் பட்டதால் பிரியா சொன்ன பல விபரங்கள் நேர்காணலில் சேர்க்கப்படவில்லை. இருந்தும், பிரியா குடும்பம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதையும், பிரியாவின் தாயார் சிறிலங்கா இராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதையும் பிரியா முன்னர் திருமணம் செய்ய இருந்தவர் சிறிலங்கா இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டார் (கழுத்தில் ரயர் போட்டு கொழுத்தி) என்பதையும்  நேர்காணல் எடுத்த அதிகாரி  ஏற்றுக்கொண்டார்.

ஆனால் பிரியா சிறிலங்கா விமானநிலயம் ஊடாக சட்டப்படி நாட்டிலிருந்து வெளியேற முடிந்ததால் அவருக்கு அங்கு பிரச்சனையில்லை என்ற அடிப்படையில் அவருடைய அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதுபோலவே நடேசுக்கும் விடுதலைப்புலிகள் தொடர்பு இருந்தாலும், அவர் போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் சிறிலங்காவிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு போய் வந்ததால் அவருக்கும் சிறிலங்காவில் எதுவித ஆபத்தையும் இல்லை என்ற அடிப்படையில் அவருடைய அகதி கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இவர்கள் குடும்பம் பிரிஸ்பேன் மாநிலத்தின் பிலொ-ஈலா என்ற ஒரு கிரமத்தில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரியாவின் தற்காலிக விசா முடிவடைந்த அடுத்த நாள் அதிகாலை, அவுஸ்திரேலிய எல்லைகாக்கும் படையினரும் காவல்துறையினரும் சேர்ந்து இக்குடும்பத்தின் வீட்டை முற்றுகையிட்டனர். தங்கள் பொருட்களை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

குடும்பம் மெல்போனில் உள்ள தடுப்புகாவல் இடமொன்றிற்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். சில நாட்களின் பின் சிறிலங்காவுக்கு திரும்ப அனுப்பும் நோக்குடன் ஒரு விமானத்திலும் ஏற்றப்பட்டனர். அகதி செயற்பாட்டாளர்களின் முயற்சியால் குடும்பத்திற்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது என்பதை கருத்திலெடுத்து நீதிமன்றம் அவர்களை வெளியேற்றுவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது. அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலிய அரசோ தொடர்ந்தும் குடும்பத்தின் அகதி நிலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி வருகிறது. மேலும் இரண்டு வெளியேற்ற உத்தரவுகளை எதிர்த்து குடும்பம் வாதாடி அவை நீதிமன்றத்திதால் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அக்குடும்பம் அவர்களின் இரண்டு சிறு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் தீவில் தனியாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் கடைசி மகள் தருணிகாவின் அகதி கோரிக்கையின் நீதிமன்ற முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இக்குடும்பத்தின் அவலம் ஈழத்தமிழர்களின் அவலத்தையே பிரதிபலிக்கிறது. பிரியா சிறுபிள்ளையாக இருந்தபோது அவருடைய அண்ணன் விடுதலைபுலிகள் அமைப்பில் இணைந்தார். இதனால் பிரியா குடும்பம் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளின் போது சிறிலங்கா இராணுவத்தால் துன்புறுத்தபபட்டது. இரவு நேரங்களில் குடும்பத்தின் வீடு குறிவைக்கப்பட்டு தாயோ தந்தையையோ அழைத்து செல்லப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட பிரியாவின் தாயார் காயங்களுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். தந்தையோ ஒரு கண்பார்வையை இழந்துள்ளார். தாயார் பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டு நினைக்கவியலாத துன்புறுத்தல்கள் அவருக்கு செய்யப்பட்டுள்ளன. பிரியாவுக்கு வயது வந்த போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் இராணுவத்தால் தீயிட்டு எரிக்கப்பட்டார். பிற்காலத்தில் அவர்கள் வீடு விமான குண்டுதாக்குதலில் அகப்பட்ட போது பிரியாவுக்கும் பாரிய காயங்கள் ஏற்பட்டன.

பிரியா-நடேசின் அனுபவங்கள் இன்று உயிருடன் இருக்கும் 20-90 வயதுக்கு உட்பட்ட ஈழத்தமிழர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. 20-90 வயதுக்கு உட்பட்ட ஈழத்தமிழர் எல்லோருமே சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு ஏதோவொரு வழியில் முகம்கொடுத்திருக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச்சாவடிகளில் நடந்த துன்புறத்தல்களிலிருந்து விபரிக்க முடியாத கொடிய சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்படல் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் என்று இவை விரிகின்றன. 50களிலிருந்து தமிழருக்கு எதிராக தொடர்ந்த தீவுதழுவிய பல படுகொலைகளே ஆயுதப்போராட்டத்திற்கும் வித்திட்டன.

அரச வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் உலகின் பல மக்களை போலவே ஈழத்தமிழர்களும் உலகின் பல நாடுகளில் தஞ்சம் கோருபவர்களாக அறியப்பட்டுள்னர். அவ்வாறு தஞ்சம் கோருபவர்களும் இந்நாடுகளில் மேலும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்தியா-ஐரோப்பா-கனடா-அவுஸ்திரேலியா என்று எங்கும் கொடுமைக்கு ஆளாக்கப்படும் ஈழத்தமிழ் அகதிகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

உலகெங்கும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டம் செய்து வருகிறார்கள். கொடுமையும் ஏக்கமும் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். சில நாடுகளில் பாலியல் வன்புணர்விற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பலரில் சிலர் மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இம்மாதிரியான அனுபவங்களின் பின்னணி உள்ள 20-90 வயதுக்குட்பட்ட ஈழத்தமிழருக்கு பிரியா-நடேஸ் பிலொ-ஈலா தமிழ் குடும்பம் அவலநிலையில் உள்ள பல லட்சம் தமிழர்களில் ஒன்று போலவே தெரியும்.

இந்த குடும்பத்தின் நிலைமையில் ஒரு பாரிய வித்தியாசம் என்னவென்றால், இக்குடும்பத்தின் போராட்டத்தை பிலொ-ஈலா கிராமத்து மக்களும் தமதாக்கி விட்டார்கள் என்பதுதான். இக்குடும்பம் அவுஸ்திரேலிய எல்லைப்படையினாரால் அன்று அதிகாலை வெளியேற்றப்பட முன்னரே இவர்களை பிரொ-ஈலா கிராமம் நன்கறிந்துள்ளது. இக்கிராமத்தவர் இவர்களுக்காக உருவாக்கிய போராட்ட இணையத்தளம் இது.

பிலொ-ஈலா கிராமத்தினர் சிலரின் உழைப்பால் இக்குடும்பத்தின் கதை இன்று அவுஸ்திரேலியா மையநிரோட்ட ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. இதனால் அவுஸ்திரேலிய மக்களிடம் இவர்களின் கதை பிரபலமாகியுள்ளது. அவுஸ்திரேலியா எதிர்கட்சியினரும், ஐநா மனிவுரிமை கவுன்சிலும் கூட இக்குடும்பத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். யூரியூப்பில் ‘Biloela Tamil family’ என்று தேடினால் பல ஊடகச்செய்திகளை பார்க்கலாம்.

கடலால் கப்பலில் வரும் அகதிகளை அவுஸ்திரேலியா துரிதகதியில் கையாளும் முறையை எதிர்க்கும் போராட்டங்களுக்கு இக்குடும்பத்தின் கதை ஒரு மையப்பொருளாகி விட்டது. இந்த மனிதநேயமற்ற அவுஸ்திரேயாவின் கொள்கையை, “தவறானது”, “அகதிகளை இருவகையாக பிரித்து இவர்களை மட்டமாக கையாளுகிறது”, “துரிதமான முடிவை எட்டும் நோக்குடன் நியாயத்தை விலையாக கொடுக்கிறது” என்றெல்லாம் விபரித்துள்ளனர்.

மனிதநேயமுள்ள அவுஸ்திரேலிய மக்கள், சிறந்த உழைப்பாளிகளான இக்குடும்பத்தின் மனதை உருக்கும் நிலைமைக்காக போராட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். போராடுகிறார்கள். ஆனால், முதலில் கூறியதுபோல ஈழத்தமிழருக்கோ, பிலொ-ஈலா தமிழ் குடும்பத்தின் நிலைமை இது போன்ற பல லட்சம் ஈழத்தமிழர்களின் கதைகளில் ஒன்றுதானே என்றுதான் தோன்றும். ஈழத்தமிழர்களின் உணர்வுகளும் களைத்து விட்டது. மனித நேயமும் வற்றிவிட்டது. இக்குடும்பத்தின் கதை இவர்களை போராட்டத்திற்கு தூண்டவில்லை.

போராட்டத்திற்கு மக்களை ஒன்று சேர்ப்பதற்கு குறியீடுகள் தேவையானவை, அவசியமானவை. இக்குடும்பம் ஒட்டுமொத்த அவுஸ்திரேலியாவின் கவனத்தை ஈர்த்திருப்பதால், ஈழத்தமிழர்களும் தங்கள் நிலைமையின் பிரதிநிதியாக, பிலொ-ஈலா குடும்பத்தை குறியீடாக ஏற்க வேண்டும். அவர்களுக்கான போராட்டங்களில் இணைய வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here