அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

இலங்கையில் மூத்த குடிகள் வாழ்ந்த பகுதியாக கிழக்கு மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் துறையின் வரலாற்று ஆய்வாளரான சி.பத்மநாதனின் கூற்றின் அடிப்படையில், இலங்கையில் தொன்மையான மனிதன் வாழ்ந்ததற்கான மிகவும் பழமையான படிமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே காணப்படுவதாக குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் தமிழர்களே ஆதிக் குடியினர் என்பதை எந்த ஐயத்திற்கும் அப்பாற்பட்டு உறுதி செய்யும் ஆதாரங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகம் வெளிப்பட்டு நிற்கின்றன.

கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளும், மற்றும் அக்காலத்தைச் சார்ந்த சமய, சமூக நடவடிக்கைகள் சார்ந்த பொருட்களும் நாகர் ஆட்சியின் சிறப்பை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.ff அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

இவ்வாறான மிகவும் பழமையும் வரலாற்றினையும் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வரலாற்றுத் தடங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் வருகின்றன.

மாவட்டத்தின் தெற்கே மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில்  உள்ளது கோவில்குளம் என்னும் பண்டைய கிராமம்.

கோவில்குளம் பகுதி தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகவுள்ள போதிலும், அப்பகுதியை தமிழர்கள் இன்று முற்றாக இழக்கும் நிலையேற்பட்டுள்ளது. குறிப்பாக இப்பகுதி தற்போது முஸ்லிம்களினால் முற்றாக அபகரிக்கப்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

இங்கு பண்டைய சிவன் ஆலயம் ஒன்றின் சிதைவுகள் சில, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காத்தான்குடி முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக அந்த ஆய்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தின் வரலாறு என்பது மிகவும் பழமையானதாக கருதப்படுகின்றது. மட்டக்களப்பை ஆண்ட கலிங்க இளவரசி உலக நாச்சியினால் கி.பி 398இல் இராஜ கோபுரத்துடன் கூடிய சிவன் கற்கோவில் அமைக்கப்பட்டு பிரதிஸ்டை பண்ணப்பட்டது. இந்த ஆலயம் அக்காலத்தில் காசி லிங்கேஸ்வரர் ஆலயம் என்று போற்றப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இக்கோவிலானது 1697இல் “அசவிடோ” என்ற போர்த்துக்கேய தளபதியினால் முற்றாக அழிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் மேற்படி ஆலயம் இருந்ததாக கூறப்படும் கோவில்குளம் பகுதியில் காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் பொது மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படிக லிங்கம், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கின்ற விஸ்ணு சிலை மற்றும் விளக்கின் பாகங்கள், மணி என்பன குழி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதனால், குறித்த பிரதேசமானது தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட  பிரதேசமாக பாதுகாக்கப்பட்டன.IMG 0101 அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

ஆனால் குறித்த பிரதேசமானது, 2012இல் காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் வேலிகள் போடப்பட்டு பள்ளிவாசல் உட்பட முஸ்லிம்களுக்கு 25 வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

குறித்த நடவடிக்கையைக் கண்டித்தும் குறித்த பிரதேசத்தை தொல்பொருள் ஆய்வு மையமாக பிரகடனப்படுத்தக் கோரியும் ஆரையம்பதி சிவில் அமைப்பினால் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதனால், முஸ்லிம் சம்மேளனத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதன் பின்பு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் அரசாங்க அதிபருக்கு முகவரி இடப்பட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு பிரதிகள் இடப்பட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டதன்படி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்காது முழுக்க முழுக்க முஸ்லிம் சம்மேளனத்திற்கு சார்பாக செயற்பட்டது மாத்திரமின்றி, குறித்த பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்துவதனை தவிர்ப்பதற்காகவும் மட்டக்களப்பில் இந்துக்களின் தொன்மையினை மறைப்பதற்குமான செயற்பாடுகளையுமே அவர் மேற்கொண்டார்.

ஏனெனில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்கின்ற மையப் பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்காக 40 பேர்ச் காணியை மாத்திரம் விடுத்து ஏனைய பிரதேசத்தில் தடையின்றி கட்டடங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை, அப்பகுதி வாழ் தமிழ் மக்களிடையே ஒரு கொந்தளிப்பை அன்று ஏற்படுத்தியிருந்தது.

குறித்த காத்தான்குடி முஸ்லிம் சம்மேளத்தின் இந்த செயற்பாடுகளுக்கு அன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து செயற்பட்ட பிள்ளையான் ஆதரவு வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இப்பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்து குடியேற்றம் செய்ய முற்பட்ட போது ஆரையம்பதியில் உள்ள பல அமைப்புகள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்த போதிலும் பிள்ளையானின் உதவியுடன் அன்றைய அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லா வீட்டுத் திட்டத்தினை அப்பகுதியில் அமைத்ததுடன் சிவன் ஆலயம் இருந்த பகுதியில் பாரிய பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்துள்ளார்.bati 3 அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

அக்காலப்பகுதியில் ஆரையம்பதியை சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த நிலையிலும், அப்பகுதி தொடர்பில் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டு ஆரையம்பதி மக்களிடம் இன்றும் உள்ளது.

இன்று கிழக்கு மாகாணத்தினை முஸ்லிம்களிடம் இருந்து மீட்கப் போவதாக கூறிவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஆரையம்பதியை சேர்ந்த அக்கட்சியின் செயலாளரும் குறித்த பகுதியை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளமை புலனாகிறது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அரசாங்கத்தினால் மீண்டும் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது அப்பகுதியில் சிவன் ஆலயம் இருந்ததற்கான அத்திபாரங்கள் மற்றும் மிகவும் பழமையான மட்பாண்டங்கள் உட்பட பெருமளவான தொல்பொருள் அங்கு கண்டெடுக்கப்பட்டன .

தொடர்ந்து அதனை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

கோவில் மற்றும் குளத்தினைக் கொண்டிருந்த காரணத்தினால் கோவில்குளம் என பெயர் பெற்ற இப்பகுதியில் குறித்த ஆலயத்தின் குளமானது இன்றும் காணப்படுகின்ற நிலையில் குறித்த குளமும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாத நிலையே இருந்து வருகின்றது.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் வரலாறுகளை சுமந்த பல தடயங்கள் அழிக்கப்பட்டு வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றினை ஆய்வு செய்து எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்வதற்கு யாரும் முன்வந்து முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை.

தமிழ் தொல்லியல்துறை ஆய்வாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கான உதவிகள் என்பதும் கிடைக்காத நிலையே இருந்து வருகின்றது.

அவரின் அயராத முயற்சியே இன்று மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை மட்டுமன்றி ஈழத் தமிழரின் தொன்மை வரலாற்றை மிக ஆணித்தரமாக நிலை நிறுத்தும் ஆதாரங்களை எமக்குத் தந்துள்ளது. இவர் போன்ற செயற்திறன், உண்மையான அக்கறை கொண்ட மனிதர்களின் பணிகளுக்கு பக்கபலமாக வேண்டியது தமிழினத்தின் கடமை ஆகும்.DSCF4132 அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் வரலாறும் வாழ்விடமும் மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகி நிற்கின்றன. பௌத்த பேரினவாதத்திற்கு மட்டுமனின்றி இஸ்லாமிய தீவிரவாத ஆக்கிரமிப்புகளுக்கும் இங்கு தமிழனம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

கிழக்கின் தமிழர் வரலாறும் வாழ்விடமும் அங்குள்ள மக்களுக்கான தேவை மட்டுமல்ல. அது உலகத் தமிழினத்திற்கே அவசியமான ஒரு அடித்தளம் என்பதை கருத்தில் கொண்டு எமது வரலாற்றையும் வாழ்விடத்தையும் பாதுகாத்து அவற்றை நிலைநிறுத்த அனைத்து தமிழ் மக்களும் ஆக்கபூர்வமான வழிகளில் விரைந்து செயலாற்ற வேண்டும்.