விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)

220
152 Views

விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்  என என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

கேள்வி -ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த கால ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் தமிழரசுக் கட்சி  தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில் நீண்ட காலமாக உறவு இருக்கின்றது. இது முழுவதும் கட்சி நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே 2015இலிருந்து 2019 வரைக்கும் தமிழரசுக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் இணைந்தே செயற்பட்டன. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்குப் பதிலாக  நிபந்தனையற்ற
ஆதரவை வழங்கிவருகிறது.

தமிழரசுக் கட்சியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் உறவை பற்றிக் கூறுவதானால், தமிழரசுக் கட்சியின் தாய்க் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று சொல்லலாம். இது காலாகாலமாக தொடர்ந்து வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பகிரங்கமான உண்மை.

கேள்வி -1965 இல் டட்லி சேனநாயக்க இருந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆதரவானது மக்களுக்கு எவ்வாறான நலத்திட்டங்களை பெற்றுக் கொடுத்தது?

மக்களுக்கு நன்மையான காரியங்களைப் பெற்றுக் கொடுப்பது என்பதற்குப் பதிலாக அவர்கள் ஐ.தே.க. கும் தமிழரசுக் கட்சிக்கும் இருந்த உறவில்  1979ஆம் ஆண்டு  ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு இவர்களும் அதற்கு ஒரு உடந்தையாக இருந்துள்ளனர்.

அந்த பயங்கரவாத தடைச் சட்டமே 30, 35 வருடங்களாக நாட்டில் பல ஆயிரக் கணக்கான இளைஞர்களை கைது செய்வதற்கும், நாட்டில் நடைபெற்ற படுகொலைக்கும் காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே ஐ.தே.க. தமிழரசுக்  கட்சிக்கும் இருக்கும் உறவு தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக பல்வேறுபட்ட அநீதிகள் இழைக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது.

கேள்வி – ஐ.தே.க.உடன் அதிகமாக உறவுகளை வைத்திருக்கும்  தமிழரசுக் கட்சி, ஏன் மற்றைய கட்சிகளுடன் உறவுகளை பேணவில்லை?

நான் முன்னர் குறிப்பிட்டது போல் ஐ.தே.க. தமிழரசுக் கட்சியின் தாய்க் கட்சி. ஆகவே அவர்களுக்குள் நீண்ட காலமாக இருந்த உறவு, தங்கள் நலன் சார்ந்தே பேணுகின்றார்களே தவிர, மக்கள் நலன் சார்ந்து உறவை வைத்துக் கொள்ளவில்லை. தவறான விடயங்களை விமர்சிப்பது வேறு. ஒரு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிக் கொண்டு தமிழ் மக்களை படுகுழியில் தள்ளுவது என்பது முழுக்க முழுக்க அவர்களின் சுயநலன் சார்ந்த விடயம்.

கேள்வி – நீங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஊடக அறிக்கையொன்றை வழங்கியிருந்தீர்கள் அந்த ஊடக அறிக்கை தேசிய அளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. அந்த ஊடக அறிக்கை பற்றி கூறுங்கள்?

யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திரு சுமந்திரன் அவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று தனியாக இருப்பதற்கு பல்வேறு இயக்கங்களை சகோதரப் படுகொலை மூலம் இல்லாமல் செய்தது தான் காரணம் என சொல்லியிருந்தார்.

இந்தக் கருத்தானது ஊடகங்கள், சர்வதேச வலைத்தளங்கள் ஊடாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. என்னைப் பொறுத்தளவில் நாங்களும் ஓர் ஆயுதப் போராட்டத்திலிருந்து வந்தவர்கள் என்ற வகையில்,  தமிழ் மக்களின் விடுதலைக்காக பல அமைப்புகள் ஆயுதம்  தூக்கிப் பேராடியது. தமது உயிரை  துச்சமென பணயம் வைத்து பல ஆயிரக் கணக்கான போராளிகள் மடிந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட அமைப்புகளிடையே சில கசப்பான  சம்பவங்கள் நடந்ததென்பது பகிரங்கமான உண்மை. அதை யாரும் மறுப்பதற்கில்லை.

இருந்தாலும்,  2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள்  ஆயுதப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த எங்களைப் போன்றவர்களை அழைத்து ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான ஒரு கௌரவமான ஓர் அரசியல் தீர்வை  எட்டுவதற்காக  ஒரு கொள்கையின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அப்படியான ஒரு கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு அந்த கூட்டமைப்பின் பெயரையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும், மாவீரர்களையும், போராளிகளையும் தேர்தல் காலத்திலே அவற்றை பேசி வாக்குகளைப் பெற்று அதற்குப் பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவரைப் பற்றி அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுமந்திரன் மட்டுமல்ல திரு சம்பந்தன் அவர்களும் கூட மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இந்த பழைய விடயங்களை கிளறி மேலும் மேலும் தமிழ் மக்களை  அல்லது இருக்கக்கூடிய கட்சிகளிடையே முரண்பாடுகளை  வளர்க்க   விரும்பவில்லை. ஆனால்  இவர்கள் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள் என்று பாராளுமன்றத்திற்குள்ளே திரு.சம்பந்தன் பேசிய உரைகள் இன்று ஒளி, ஒலிவடிவில் ஹன்சாட்டில் உள்ளது. அதேபோல் பல தடவைகள் சுமந்திரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக  பகிரங்கமாக வைக்கப்பட்ட விமர்சனங்கள் இருக்கின்றது.

ஆகவே இந்தக் கருத்துக்களோடு  தொடர்ச்சியாக முன்வைக்கின்றவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகளும், மாவீரர் குடும்பங்களும் , அல்லது ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக அந்த இயக்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவரையும் , கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாக இருக்கக்கூடிய திரு சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் மிகக் கொடூரமான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பை  தமிழீழ விடுதலைப் புலிகள், மாவீரர் குடும்பம், போராளிகள் குடும்பம் எந்த வகையில் இவர்களை ஆதரிக்க முடியும் என்பது தான் எங்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here