சிறீலங்கா அரசிடமிருந்து 2100 மீனவர்கள் 381 படகுகள் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு தகவல்

இந்திய வெளியுறவு அமைச்சின் தீவிர முயற்சியால், 2014ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட 2100 மீனவர்களும் 381 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மறுவாழ்விற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மீனவர்கள் மறுவாழ்விற்காக தமிழக அரசிற்கு கடந்த 5 ஆண்டுகளில், வழமையாக வழங்கப்படும் 184 கோடியே 93இலட்சம் ரூபாயுடன் 300 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்கடல் மீன்பிடித்தல் உதவி என்னும் பெயரில் பாரம்பரிய மீனவர்களுக்கு உதவியாக மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ், சிறீலங்கா அரசால் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை, சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட 2100 மீனவர்களும் 381 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.