தமிழன் எங்கே தன் ஆரோக்கியத்தை தொலைத்தான்? – தீபா

219
159 Views

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு “மூலம்” உள்ளது. தாவரமாக இருந்தால் அதற்கு விதையும், மனிதன் முதற்கொண்டு புழு பூச்சிகள் வரை உள்ள உயிரினங்களுக்கு விந்தே மூலமாக அமைகிறது. “மூலம்” என்பது உண்டாகக்கூடிய அல்லது உண்டாக்கக்கூடிய ஒரு உயிரியாகும். இந்த உயிரிக்கு மூல காரணமே ஐம்பெரும் சக்திகளான காற்று, நீர், நெருப்பு,ஆகாயம், மண் ஆகியவைகளாகும். இந்த ஐந்தும் ஒருங்கிணையும் போது தான் உற்பத்திக்கு வித்தான “உயிரி” தோன்றுகிறது. இந்த உயிரி சார்ந்திருக்கக்கூடிய மனித உடலுக்கும் இந்த பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைப்பு மிகமிக அவசியமாகும்.

இந்த பஞ்சபூத சக்திகளை தங்களின் தவவலிமையால் தங்களுக்கு கட்டுப்பட வைப்பவர்களே சித்தர்கள். தமிழன் என்ற இனம் சித்தர்கள் வழி மற்றும் வழிகாட்டுதலில் தோன்றியதேயாகும். நமது அத்தனை பாரம்பரிய விழுமியங்களும் சித்தர்களின் மெய்ஞானத்தால் கண்டறியப்பட்டு நம் முன்னோர்க்கு பயிற்றுவிக்கப்பட்டு, வாழையடி வாழையாக நம்மால் கடைபிடிக்கப்பட்டு வருபவையே. இதனால் தமிழன் தன் உணவு பழக்க வழக்கம் மற்றும் மருத்துவம் உட்பட அனைத்து துறைகளிலும் உன்னத நிலையிலேயே இருந்தான்.

தமிழர்களின் உணவுகள் முறையே அறம் வளர்க்கும் தானியமாகிய அரிசி,அருந்தானியங்களான கம்பு,தினை, சாமை, வரகு,குதிரைவாலி, தானியங்களான உளுந்து,பாசிப்பயறு, தட்டைப் பயறு,எண்ணெய்வித்துகளான நிலக்கடலை,எள்,மற்றும் கிழங்கு வகைகள், பழங்கள், மூலிகைகள், காய்கறிகள் ஆகியவற்றையே சார்ந்திருந்தன.

நம் முன்னோர்கள் இனிப்புச் சுவைக்காக தேன்,கருப்பட்டி (பனைவெல்லம்) சுத்திகரிக்கப்படாத கரும்பு சர்க்கரையையும் (Unrefined cane sugar) புளிப்புச் சுவைக்காக குடம் புளி(Malabar tamarind) என்கின்ற புளியையும் காரச் சுவைக்காக நல்ல மிளகு (Black Pepper), இஞ்சி,திப்பிலியையும் உவர்ப்புச் சுவைக்காக கடலுப்பையும் பயன்படுத்தியுள்ளனர்.

நல்ல மிளகானது உடலின் வெப்பத்தை சீராக வைத்தல்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்,உடலின் நச்சுக்களை வெளியேற்றுதல்,உடலின் உள் உறுப்புகள் மற்றும் செல்களை புதுப்பித்தல் ஆகிய முக்கிய பணிகளைச் செய்கிறது.

மேலும் கற்பக மரங்களான பனை மற்றும் தென்னை சார்ந்த உணவுகள் மிக அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தன. தேங்காய் மிகச் சிறந்த மனித உணவு.இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை  (LDL) நல்ல கொழுப்பாக (HDL) (மாற்றுகிறது. தேங்காயை சூடுபடுத்தினால் அது கெட்ட கொழுப்பாக மாறுகிறது.

சமையல் எண்ணெய்யாக மரச்செக்கில் ஆட்டப்பட்ட (Raw & Cold Pressed) நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றையே பயன்படுத்தி யுள்ளனர். இந்த இயற்கையான பாரம்பரிய உணவுகளே எம் உடலுக்கான இயற்கை மருந்தும் கூட. இதனையே “உணவே மருந்து மருந்தே உணவு” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு வாழ்ந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் தமது பாரம்பரிய உணவு பழக்கத்தை எங்கே தொலைத்தது?

வணிகத்தை முன்னெடுக்க உருவான இன்றைய அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சியாலும் ,பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர உத்திகளாலும் நமது எண்ணங்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றது.

வெள்ளைச் சீனி,தீட்டப்பட்ட வெள்ளை அரிசி, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மற்றும் கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய்கள், மைதாவினால் செய்யப்பட்ட பரோட்டா (கொத்து ரொட்டி), நாட்டு மாட்டுப் பால் அல்லாத ஜெர்சி மற்றும் கலப்பின மாட்டுப்பாலும் அதைச் சார்ந்த உணவுகளும் (தயிர், மோர்,வெண்ணெய்நெய்) நம் உடலின் செல்களை சிதைத்து விடுகின்றன.

இன்று நாம் அரிசி உணவைத் தவிர்த்து கோதுமையால் செய்யப்பட்ட உணவே சிறந்தது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் கோதுமை நமது பாரம்பரிய உணவே அல்ல. அது நாடோடிகளின் உணவு. அவர்களுக்கே எளிதில் கெடாத உணவு தேவைப்பட்டது. கோதுமையானது 60 வருடமாக தான் இந்தியாவில் உள்ளது. கோதுமையில் உள்ள சில அமினோஅமிலங்கள்(Gluten) நம் கணையத்தை பாதிப்பதாக ஆவணங்கள் இன்று நம்மிடையே உள்ளன.

பச்சை மிளகாய் (Green Chilli)  மற்றும் வற்றல் பொடி (Red Chilli Powder)ஆகியவற்றை கார சுவைக்காகவும், புளிப்புச் சுவைக்காக அமிலத் தன்மை அதிகம் உடைய புளியையும் நாம் இன்று பயன்படுத்துகிறோம். இவை நமது நரம்பு மண்டலத்தைச் சிதைத்து விடுகின்றன.

நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட், கேக்,சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களாகிய தொழிற்சாலை உணவுகளில் முக்கியமாக மூன்று மூலப்பொருட்களைச் சேர்க்கின்றனர். முதலாவது HFCS (High Fructose Syrup அல்லது Glucose Fructose Syrup) இது மதுவிற்கு இணையான பொருள்.

இரண்டாவது Aspartame (E951) என்கின்ற செயற்கை சர்க்கரை. இது வெள்ளைச் சீனியை விட 200 மடங்கு இனிப்புச் சுவை உடையது. மூன்றாவது Emulsifiers (E471) என்கின்ற மாமிச மற்றும் தாவர கொழுப்புகள். இவை மூன்றுமே இல்லாத தொழிற்சாலை உணவுப் பொருட்கள் இன்று அங்காடிகளில்(Super Market)விற்பனை செய்யப்படுவதில்லை.

இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் கொடிய இராசயனங்களைக் கொண்டே தொழிற்சாலைகளில் தயாரிக்கின்றனர். இந்த இராசயனங்கள் நம்மை கொல்லும் விஷங்கள். இவற்றை நம் உடலால் செரிமானம் செய்ய இயலாது. ஏனென்றால் நம் முன்னோர் உண்ட உணவின் பதிவுகள் நமது DNAவில் (Genetic Code)உள்ளன.

நாம் நமது பாரம்பரிய உணவை உண்ணும்போது மட்டுமே நமது செல்கள் மகிழ்ச்சியடைந்து செரிமானத்திற்கான என்சைம்களை சுரக்கின்றன. ஆனால் தொழிற்சாலை உணவுகளை உண்ணும்போது அவை கழிவுகளாக நம் உடலில் தேங்குகின்றன. இந்த கழிவுகளின் தேக்கமே நோய்களின் உருவாக்கம்.

அடுத்து விதையற்ற பழங்கள், ஒட்டுரகங்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள்,பழங்கள் அனைத்துமே நமது உடலின் செல்களை சிதைத்து நம் மரபணுவில்(DNA)மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. இதனால் உன்னத நிலையில் இருந்த நாம் நமது பாரம்பரிய அறிவு மற்றும் குணாதிசயங்களை இழந்து திறனற்ற இனமாக மாறி வருகிறோம். சுருக்கமாக, நமது சொந்த செலவிலேயே நமக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் நாமே சூனியம் வைத்துக் கொள்கிறோம்.

இந்த உணவு முறை மாற்றத்தின் உச்சகட்டமாக இன்று நம்மிடையே செயற்கை கருவூ ட்டல் (IVF,IUI)முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளிடம் இயற்கையாக பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கும் வீரியம் இருக்காது.

இதிலிருந்து எப்படி நமது அடுத்த தலைமுறையை மீட்டெடுப்பது?

நமது குடும்பங்களில் நமது பாரம்பரிய உணவு முறையை பின்பற்ற வேண்டும். அதற்கு முதலில் நமது எண்ணங்களில் மாற்றம் வேண்டும். இந்த எண்ணங்கள் நம்பிக்கையாகி செயல் வடிவம் பெற வேண்டும். இந்த செயல் பழக்கமாகி அதுவே ஒரு தனி மனித குணமாக மாற வேண்டும்.

உணவு என்பது நாவின் ருசிக்காக அல்ல, மாறாக உடல் உள் உறுப்புகளை பாதுகாப்பதாக அமைய வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வார்.

தமிழராய் வாழ்வதில் நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வோம்! நோயில்லா பெரு வாழ்வு வாழ்வோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here