ரஞ்சன் தொலைபேசி உரையாடல் பிரதிகளை அனுப்ப பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதித்துறையுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நீதிபதிகள், நீதித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்டுள்ள தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை அனுப்புமாறு நீதிச் சேவை ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் காணப்படுமிடத்து அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார். இதன்போது, பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்திலிருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின் போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நீதிபதிகள் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.