திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் வடகிழக்கு மக்கள் தமது தாயத்தினையும் தமது மண்ணையும் பாதுகாக்க இன்று வரையில் போராடியே வருகின்றனர் வருகின்றனர்.

தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாக போராடி பின்னர் ஆயுத ரீதியான போராட்டத்தினை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் பல்லாயிரக்கணக்கான கோடி பொருட்சேதங்களையும் எதிர்கொண்டனர்.தமது மண்ணைப்பாதுகாக்க போராடிய எமது இனம் இன்று எதனையும் பாதுகாக்கமுடியாத நிலையில் தமது இருப்பினை இழந்துவருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த நாட்டில் சிங்கள பெரும்பான்மையினம் தமிழினத்தினை சீரழிப்பதற்கு கடந்த காலங்களில் பல உக்திகளை முன்னெடுத்துவந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக கண்ணுக்கு புலப்படாத வகையில் பல இன அழிப்பு செயற்பாடுகளை இந்த சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்றது.அதில் ஒன்றுதான் மண் கொள்ளை.

இன்று வடகிழக்கின் பெரும் வளங்களில் ஒன்றாக கருதப்படும் மண் வளம் சூறையாடப்பட்டு தெற்கிற்கும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படும் நடவடிக்கைகள் சட்டம் என்ற ஒன்றை பாவித்து மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.IMG 20191226 WA0023 திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா

எதனை பாதுகாக்க நாங்கள் 30வருடமாக ஆயுதம் ஏந்தி போராடினோமோ அதனை நாங்கள் பாதுகாக்கமுடியாத நிலையில் இருக்கின்றோம்.வடகிழக்கின் எல்லைப்பகுதிகள் இன்று மண் கொள்ளையின் பெயரினால் அழிக்கப்படுகின்றன. வளம் கொழிக்கும் பகுதிகளை பாலைவனமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சிங்கள பகுதிகளில் நீர் ஏந்து பகுதிகளில் முன்னெடுத்துவரும் மணல் அகழ்விற்கு தடைவித்துள்ள அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தினை மணல் அகழ்விற்கான பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

அனைத்து வளங்களையும் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசம் இன்று மணல் கொள்ளையின் பரிமாணமாக மாற்றமடைந்து வருகின்றது. இது எதிர்காலத்தில் படுவான்கரை என்னும் பகுதி இருந்ததற்கான அடையாளம் இல்லாத நிலையினை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யுத்தகாலத்தில் தமிழீழ காவல்துறையினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பாதுகாத்துவைத்திருந்த இயற்கை வளங்கள் அனைத்தும் இன்று காவுகொள்ளப்பட்டுவருகின்றன.

மலைகள்  உடைக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுகின்றன, காடுகள் அழிக்கப்படுகின்றது பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமாக மண் அகழ்வு துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது.IMG 20191226 WA0035 திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா

இன்று தினமும் தெற்கில் இருந்துவுரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மண்ணை கடத்திச்செல்லும் நிலையேற்பட்டுள்ளது.இந்த மண் கொள்ளைக்கு மட்டக்களப்பு அரச நிர்வாகம் பக்கத்துணையாக இருப்பதாக பொதுமக்களினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவு போன்ற பகுதிகளில் இந்த மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேசம் மண் மாபியாக்களின் இருப்பிடமாக மாறிவருகின்றது.இதற்கு துணையாக சிங்கள அரசியல்வாதிகளும் எமது சுயநலம்கொண்ட அதிகாரிகளும் இருப்பதுதான் கவலையான விடயமாகவுள்ளது.

ஏறாவூர்ப்பற்று நீர்வளமும் வயல் வளமும் நிறைந்த பிரதேசமாகவும் இப்பிரதேசத்தில் யுத்ததிற்கு பின்னர் பாரியளவில் மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதன் காரணமாக மழை காலங்களில் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதுடன் கோடை காலத்தில் பாரிய வறட்சி நிலையினையும் எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.

இப்பகுதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளை நிறுத்துமாறு பல தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதிலும் அவற்றில் அரசாங்கம் எந்தவித கரிசனையும் காட்டாது தொடர்ந்து மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இப்பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாகவே அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததின் போது மாவடியோடை அணைக்கட்டு நீரில் உடைத்துச்செல்லும் நிலைமையினையும் உருவாக்கியிருந்தது.

யுத்ததிற்கு பின்னரான காலம் தொடக்கம் இந்த மண் அகழ்வினால் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில் அவை தொடர்பில் எந்த கரிசனையும் காட்டாத நிலையே இருந்துவருகின்றது.குறிப்பாக இந்த மண் அகழ்வினை ஒரு சாதாரண விடயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் எடுத்துக்கொள்ளும் நிலையில் அது தொடர்பில் கரிசனையற்ற நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

இதற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் இது தொடர்பில் வினவியபோது இதற்கான பதிலை வழங்குவதில் தாங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் மட்டக்களப்பில் மண் அகழ்வதினை தீர்மானிப்பது தெற்கில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் இன்னும் பத்து வருடங்களில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் என சூழலியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.IMG 20191226 WA0029 திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா

ஒரு நாளைக்கு மட்டக்களப்பில் இருந்த சுமார் 1000 கியூப் மண்கள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் இது மாவட்டத்தின் இயற்கை வளங்களையும் மக்கள் குடித்தொகையையும் பாரிய சிக்கல் நிலைக்குள்ளாக்கும் நடவடிக்கையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக இன்னும் ஐந்து வருடங்களில் ஏறாவூர்ப்பற்று, கிரான் போன்ற பிரதேசங்களில் வெள்ள காலங்களில் மக்கள் வசிக்கமுடியாத நிலையேற்படுவதுடன் அப்பகுதிகளில் எந்த காலத்திலும் மக்கள் வசிக்கமுடியாத சூழ்நிலையேற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளிலோ முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளிலோ இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதி மட்டும் இலக்குவைத்து இவ்வாறான சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கைகளை சட்ட ரீதியான முறையில் அரசாங்கம் மேற்கொண்டுவருவது குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

உரிமையினையும் எமக்கான சுதந்திரத்தினையும் கோரி நிற்கும் நாம் எமது வளங்களை பாதுகாப்பதற்கு தவறிவருகின்றோம் என்ற உண்மை இன்று உணரப்பட்டுள்ள நிலையில் அதற்கான செயல்வடிவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.