மட்டக்களப்பில் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ்மக்கள்

207
117 Views

தற்போது பெய்து கொண்டிருக்கும் அடை மழையினாலும், சில குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கல்குடா தொகுதியில் மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அந்த வகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர், வாகரைப் பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகளில் பல இடப்பெயர்வுகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கிண்ணையடி, சாராவெளி, முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, மிராவோடை பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 217 குடும்பங்களில் 687 பேர் கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திலும், மிராவோடை சக்தி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.

அத்தோடு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை, மாஞ்சோலை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களில் 220 பேர் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 682 குடும்பங்களில் 2455 பேர் உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாக செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புனானை கிழக்கில் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களில் 91 பேர் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக செயலாளர் எஸ்.கரன் தெரிவித்தார்.

மேலும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 84 குடும்பங்களில் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் 22 பேரும், கிரான் மேற்கில் 153 பேரும், முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ணமிஷன் பாடசாலையில் 27 பேரும், சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் 58 பேருமாக இடைத்தங்கல் முகாமில் உள்ளனர். அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களில் 48 பேர் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருவதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இயந்திர படகுகள் மூலம் இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அத்தோடு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் பார்வையிட்டு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானம் தற்போது நீரில் சூழப்பட்டு கடல் போன்று காட்சியளிப்பதுடன், அதனோடு இணைந்து காணப்படும் சிறுவர் விளையாட்டு பூங்கா நீரில் மூழ்கி காணப்படுகின்றது. இதற்கு அருகில் ஆறு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here