03. சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் ஐவர் மீது நேற்றுமுன்தினம் (19) இரவு பல மாணவர்கள் இணைந்து தாக்குதல் நடத்தியதுடன் வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதையடுத்து வெட்டுக்காயங்களை ஏற்படுத்திய மாணவனையும், குழுக்களாக வீதியில் மோதலில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்கள் குழுக்களை சேர்ந்த 20 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை ஆராய்ந்த நீதிபதி சந்தேகநபர்களான மாணவர்கள் 21 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



