தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் இன்றைய தினம் (21) மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் வலி. தெற்கில் மாவீரர் நினைவு வளாகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியினர் அதனை இன்று ஆரம்பித்து வைத்தனர்.

இதேவேளை நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்க காவல்துறையினர் தடையேற்படுத்தியிருந்தனர்.

தடைகளை மீறியும் கொட்டகை அமைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன.

நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்று (20) மாலை அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளை காவல்துறையினர் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஐவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளை, மற்றுமொரு தரப்பு காவல்துறையினர் கொட்டகைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காவல்துறை விசாரணையின் பின்னர் ஏற்பாட்டுக் குழுவினர், மீண்டும் அதே இடத்தில் கொட்டகை அமைக்க முற்பட்டபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல்துறையின் எதிர்ப்புக்கு மத்தியிலும், நெல்லியடி நகரில் நினைவேந்தல் கொட்டகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படும் என்று ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல் நாளில் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

அந்தவகையில் மாவீரர் துயிலுமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.