இலங்கைக்கும் பங்களாதேஷிற்க்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள, பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமாயூன் கபீர் – வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திராவுக்கும் இடையில் இன்று (19) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடனும் உயர்மட்டச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த சந்திப்பு தொடர்பில் இன்று (19) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அருண் ஹேமசந்திரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமாயூன் கபீர் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த விஜயத்தின்போது இரு நாடுகளினதும் உயர்மட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் வலுவான இருதரப்பு உறவுகளையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விஜயத்தின் முக்கிய மைல்கல்லாக, இலங்கை – பங்களாதேஷ் விரிவான ஒத்துழைப்புக்கான கூட்டுக் கலந்தாய்வு ஆணைக்குழுவை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதேவேளை, பிராந்திய மற்றும் பல்தரப்பு மட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பங்களாதேஷிற்க்கும் இடையிலான உறவுகளைப் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் இந்த விஜயத்தின் ஊடாக ஆராயப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தின் மூலம் எட்டப்பட்டுள்ள சாதகமான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர்; மேலும் சுட்டிக்காட்டினார்.



