மாமனிதர் நடராசா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜ் நினைவுச் சதுக்கத்தில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் அங்கிருந்த ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர்தூவித் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா ரவிராஜ், தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

2001-ஆம் ஆண்டு: யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

2001 மற்றும் 2004-ஆம் ஆண்டுகள்: நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) சார்பில் போட்டியிட்டு, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் வெளியிலும் துணிச்சலாகக் குரல் கொடுத்தவர் ஆவார். அத்துடன் சிவில் உரிமைகளுக்கான அமைப்புகளை உருவாக்கிப் தீவிரமாகப் பணியாற்றினார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மிகச் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்ட இவர், தென்னிலங்கைச் சிங்கள ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளையும், இனப்பிரச்சினைக்கான அமைதித் தீர்வின் அவசியத்தையும் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துணிச்சலாக எடுத்துரைத்தார்.

இவ்வாறான பின்னணியில், 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிவிட்டுத் திரும்பிய பின்னர், நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.