இலங்கையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் லண்டனில் விசேட வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்வேலைத்திட்டத்துக்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமை தாங்கினார்.
130 க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்ட பிரதான முதலீட்டு மாநாடு, இலங்கை – பிரித்தானிய வர்த்தக சபையுடனான சந்திப்பு மற்றும் லண்டன் முதலீட்டு சமூகத்துடனான சந்திப்புகள் மூலம் இருதரப்பு வர்த்தகச் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டன.
பிரித்தானியாவின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் இலங்கைக்குக் கிடைக்கும் சலுகை பெற்ற சந்தை அணுகலை இலங்கை ஏற்றுமதியாளர்கள் அதிகபட்சமாகப் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இலங்கையை நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முதன்மை மையமாக சர்வதேச தளத்தில் நிலைநிறுத்துவதற்கு இந்த விஜயம் பெரும் பக்கபலமாக அமைந்ததாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.



