மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக போராட்டம்

லையக தமிழ் மக்களுக்குச் சொந்தக் காணி உரிமையையும், கண்ணியமாக வாழ்வதற்கான வீடமைப்பு உரிமையையும் உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி தலைநகர் கொழும்பில் புதன்கிழமை (11) விசேட கவனயீர்ப்புப் பேரணி மற்றும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிவில் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டம், நாளை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
மலையக மக்களின் அடிப்படை உரிமைகளான காணி மற்றும் வீடமைப்பு உரிமைகள் மனித உரிமைகளின் ஒரு முக்கிய அங்கம் என சுட்டிக்காட்டியுள்ள ஏற்பாட்டாளர்கள், இந்த உரிமைகளை அவற்றுக்குரிய முறையான வழிகளில் உறுதிப்படுத்துவதில் நிலவும் தொடர் தாமதங்கள் தவிர்க்கப்பட்டு, அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சுயமாக வீடொன்றை அமைத்துக் கொள்ளக்கூடிய வல்லமை கொண்ட மலையக மக்களுக்கு, அதற்கான காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல், வீடொன்றை அமைப்பதற்குத் தேவையான நிதி உதவியை பெறக்கூடிய வகையில், சலுகை மற்றும் எளிதான தவணைக்கட்டண அடிப்படையிலான கடன் வசதிகளையும் காணி உரிமையையும் மலையக மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தல் என்பன இந்த போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

சொந்தமாக வீடொன்றைக் கட்டிக் கொள்ள எந்தவித வசதிகளும் அற்ற மலையக ஏழை மக்களுக்கு, அரசாங்கமே முழுமையான வீடுகளை அமைத்துக் கொடுக்கக் கோரி குரல் எழுப்புதல், இனியும் காலந்தாழ்த்தாமல் மலையக மக்கள் சமூகத்தில் கண்ணியமாக வாழத் தேவையான காணி மற்றும் வீடமைப்பு உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுத்தல் என்பவும் தமது பிரதான நோக்கத்தில் உள்ளடங்குவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையக மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கவும், அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும், அமைப்புகளையும் இந்த போராட்டத்திற்குத் திரண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.