நாட்டில் இன்று நிதிச் சுதந்திரம் இல்லை : சஜித் பிரேமதாச

“ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி” எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் ஆட்சியில்தான் இன்று முழு கொழும்பும் வெள்ளத்தில் மிதப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

களுத்துறை, அகலவத்தை தேர்தல் தொகுதியில் இன்று சனிக்கிழமை (7) நடைபெற்ற ஐக்கிய இளைஞர் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பைப் புதுப்பித்து 6 மாதங்களில் ஒளிரச் செய்வதாகக் கூறியவர்கள், வடிகாலமைப்புகளை முறையாகத் துப்புரவு செய்து பராமரிக்கத் தவறியமையினாலேயே கொழும்பு நகரமே நீர்த்தேக்கமாக மாறியுள்ளது.

ஜனாதிபதி அதிகாரம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் பெண் மேயர் என அனைத்தும் இருந்தும் தலைநகரின் நீர் முகாமைத்துவத்தைக் கூடச் சரியாகக் கையாள முடியாத இந்த அரசாங்கம், எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்பப் போகிறது என்பது பெரும் கேள்வியாகும். ஒரு நாள் மழையிலேயே மக்களின் இயல்பு வாழ்க்கை நாசமாகியுள்ளது.

பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அஞ்சுகிறது.

இதனால், பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, தங்களை மக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலான புதிய அடக்குமுறைச் சட்டங்களை அவர்கள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

நாட்டில் இன்று நிதிச் சுதந்திரம் இல்லை; சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்திடமே (IMF) கையேந்தும் நிலை காணப்படுகிறது.

2027 மார்ச் மாதத்துடன் IMF இணக்கப்பாடு முடிவடையும் நிலையில், 2028ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கான பொருளாதார வளர்ச்சியோ, வெளிநாட்டு முதலீடுகளோ, ஏற்றுமதி வளர்ச்சியோ அரசாங்கத்திடம் இல்லை.

அரசாங்கத்தின் பொய் வாக்குறுதிகளை நம்பி நாட்டின் இளைஞர்கள் உட்பட 220 இலட்சம் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இளைஞர்கள் வெறும் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே நாட்டு மக்களுக்குச் சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே.

ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலாக அபிவிருத்தியையும், இளைஞர்கள் தமது திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் உச்சத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகளையும் தமது கட்சி உருவாக்கிக் கொடுக்கும் என்றார்.