மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு, மாதவனை அத்துமீறல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (6) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது….
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றவர். மட்டக்களப்பில் ஒரு அநியாயம் நடக்கும்போது பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச இதுவரை அதைப் பற்றி அலட்டாமல் இருப்பது அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதித்துள்ளார்.
கடந்த 2024 ஜூலை 24இல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கென ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்து, மயிலத்தமடு – மாதவனை பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதாக பகிரங்கமாக உறுதியளித்திருந்தார்.
கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய 139,110 வாக்குகளை பெற்றார்.
இரவு பகலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒரு அணியினர் விசுவாசமாகவும். அர்ப்பணிப்பாகவும் சுவரொட்டிகளை ஒட்டியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் மேடை போட்டும் பிரசாரம் செய்தனர். அவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்?
மட்டக்களப்பு மாவட்டத்தில் 139,110 மொத்த வாக்கு சஜித் ஜனாதிபதி தேர்தலில் பெற்றார். அதில் மட்டக்களப்பு தொகுதியில் 64,068 வாக்குகளும் கல்குடா தொகுதியில் 45,325 வாக்குகளும் பட்டிருப்பு தொகுதியில் 26512 வாக்குகளும் தபால் மூலமாக 3205 வாக்குகளும் அவருக்கு கிடைத்தன.
2026 நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஒரு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத் ஆகியோர் அங்கு நடக்கும் அத்துமீறல் தொடர்பாகவும், அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கு தொடர்பாகவும் தற்போதைய அநுர அரசின் ஏமாற்றம் தொடர்பாகவும் விளக்கமாக உரையாற்றினர்.
உண்மையில் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயம் தொடர்பாக தமது கருத்தை கூறவில்லை. அதனை விட்டு விலகி வேறு விடயங்களை மட்டுமே அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் தமிழ் பேசும் கட்சிகளை தமது அலுவலகத்தில் அழைத்து கூட்டம் நடத்துகிறார். மேய்ச்சல் தரை தொடர்பாக அவர் அந்த கலந்துரையாடல்களில் பேசினாரா, பேசவில்லையா என்பதை கூட அவருடைய ஊடகக் குழு வெளியிடவில்லை. வட கிழக்கு மக்களால் தெரிவான தமிழ் தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவருடன் உரையாடுகிறார்கள். படங்கள் காட்டப்படுகின்றன.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பாக இதுவரை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இதை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசவில்லை என கேட்காமல் தலையாட்டி வருகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை காட்டவில்லையெனில், ஏன் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேரத்தை வீணடிக்கவேண்டும் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.



