ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு மனோ விளக்கம்

ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து, சிறுபான்மை கட்சிகள் விலகுவதாக வெளியான செய்தி குறித்து குறித்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.

தங்களது தரப்பில் இதுவரை அப்படி ஒரு முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற வகையில் தாமும் பிரதி தலைவர்களான திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கையொப்பம் இட்டுள்ளோம்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உடனான எமது கூட்டணியை, நான் ஒரு “மெய்நிகர் கூட்டணி” என்றே குறிப்பிடுகிறேன். ஏனெனில், இந்த கூட்டணியை வலுப்படுத்த அர்த்தமுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதுவரை முன்னெடுக்கவில்லை” என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பல தலைவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பிரமுகர்களும் இந்த கூட்டுறவை வலுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தேவையான நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முறையாக இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.