பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (OCA) ஆகியவற்றை முழுமையாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, பாராளுமன்றத்துக்கு அருகில் இன்று (04) நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம், சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உடலில் பச்சை குத்தியிருப்பதைப் போன்ற தோற்றத்தில் சாயம் பூசியும், கேலிச் சித்திரங்கள் மற்றும் எதிர்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், சிறைச்சாலையின் யன்னல்களைப் போன்ற உருவ அமைப்புகளைத் தயாரித்து அவற்றைச் சுமந்தவாறு போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி விரைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு தமது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற பிரதான நுழைவாயில் வரையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தடை வேலிகளை (இரும்பு கூட்டக் கட்டுப்பாட்டு வேலிகள்) இணைந்து அதில் ஏறி நின்று மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினர் வசந்த முதலிகே போராட்டத்தின் நோக்கத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்.



