வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ் இன்றிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் : நிதி அமைச்சு அறிவிப்பு!

புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் மோட்டார் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பித்தல் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசேட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள இந்தப் பொது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஏற்கனவே வரியாளர் அடையாள இலக்கத்தைக் கொண்டுள்ள போதிலும் சான்றிதழ் கைவசம் இல்லாதவர்கள், தமது இலக்கத்தை மாத்திரம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வரியாளர் அடையாள இலக்கத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாத நபர்கள், தமது தேசிய அடையாள அட்டை இலக்கம், பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைச் சமர்ப்பித்து இச்சேவைகளைப் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் வழங்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வரியாளர் அடையாள இலக்கத்தை வழங்குவதற்கோ அல்லது பதிவினை மேற்கொள்வதற்கோ உரிய நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்யும்.

வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக எந்தவொரு சேவையும் தாமதப்படுத்தப்படவோ அல்லது மறுக்கப்படவோ கூடாது என அமைச்சு திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

8 பிரதான பரிமாற்றங்களுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்:

வங்கி மற்றும் வாகன வருமான உரிமப் புதுப்பித்தலுக்கான விசேட ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, நவம்பர் 1ஆம் திகதி முதல் எட்டு குறிப்பிட்ட பரிமாற்றங்களுக்கு வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய வங்கி அல்லது நிதி நிறுவனக் கணக்கைத் திறத்தல்.

மோட்டார் வாகன வருமான உரிமத்தைப் புதுப்பித்தல்.

கடன் அட்டை ஒன்றைப் பெற்றுக்கொள்ளல்.

கட்டடத் திட்டத்துக்கு அனுமதி பெறுதல்.

மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல்.

காணி அல்லது காணி உரிமைப் பதிவு.

வியாபாரப் பதிவு.

நிறுவனப் பங்குகளைப் கைமாற்றுதல்.

குறிப்பிட்ட இந்த எட்டு பரிமாற்றங்களில், வங்கிக் கணக்குத் திறப்பு மற்றும் வாகன வருமான உரிமப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு மாத்திரம் சிறப்புத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஆறு பரிமாற்றங்களுக்கும் கட்டாயம் வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

கணினி மூலம் உருவாக்கப்படும் வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ்களின் அச்சிடப்பட்ட மற்றும் மின்னணுப் பிரதிகள் இரண்டும் சட்டபூர்வமானவையாக ஏற்றுக்கொள்ளப்படும். அவற்றுக்கு உத்தியோகபூர்வ கையொப்பங்கள், முத்திரைகள் அல்லது உண்மைப் பிரதி எனச் சான்றளித்தல் அவசியமில்லை.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வதிவிடக் குடிமக்கள் அனைவரும் வரியாளர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாகும். எனினும், அதனை வைத்திருப்பது மாத்திரம் அவர்களை ஒருபோதும் வருமான வரி செலுத்துபவர்களாக மாற்றாது.

ஆண்டு வருமானம் 1.8 மில்லியன் ரூபா என்ற நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் பட்சத்தில் மட்டுமே வருமான வரிப் பொறுப்பு ஏற்படும்.

அவசரமாக வரியாளர் அடையாள இலக்கம் தேவையற்ற நபர்கள், திணைக்களத்திலும் அதன் இணையவழி முறைமையிலும் நிலவும் நெரிசல்கள் குறையும் வரை பதிவுகளைச் செய்வதைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.