வட மாகாண ஆளுநருக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தற்போதைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ். மாவட்ட அரச அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் முறைகேடுகள் உள்ள நிலையில் அவை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாட்டை வழங்கினார்.

தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டுவரும் நாகலிங்கம் வேதநாயகன் 2015 மார்ச் முதல் 2020 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக செயற்பட்டுள்ளார்.

குறித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலே குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன

குறித்த முறைப்பாட்டில் யாழ் மாவட்ட செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் நிதிமுறைகேடுகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டதன் மூலம் பல மில்லியன்கள் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன்‌ குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சில ஆதரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அரச நிதி முறைகேடுகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டவரும் தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்படுவருமான நாகலிங்கம் வேதநாயகனின் ஊழல், மோசடிகள் தொடர்பில் விரைவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோருவதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.