அரச செலவினங்களைக் குறைக்க 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்: ஜனாதிபதி

அரச செலவினங்களைக் குறைத்து, அரசாங்கத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கான முடிவுகளை நிதி அமைச்சு இறுதி செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற அரசாங்க நில அள வையாளர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உரை யாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். பொதுச் சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பொதுச் சேவைகளை வழங்குவதற்கான செலவுகள் மிக அதிகரித்துள்ளதால், அரச நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும், தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்கும் சில நிறுவனங்களை மூடு வதுடன், மேலும் சில நிறுவனங்களை ஒன்றிணைக்கவும் அரசாங் கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த மூடல் மற்றும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்காக விசேட குழு வொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த மாற்றங்களின் அவசியத்தை விளக்கிய அவர், பல அரச நிறுவனங்கள் நிறுவப்பட்ட காலத்திலிருந்து தற்போதைய சூழ்நிலைகள் பெருமளவில் மாறியுள்ளதாகத் தெரிவித்தார். முன்னர் அரசாங்கம் மாத்திரமே சேவைகளை வழங்கிய பல துறைகளில் தற்போது வலுவான தனியார் துறையொன்றும் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சில சேவைகளை அரசாங்கம் நேரடியாகத் தொடர்ந்து வழங்க வேண்டுமா அல்லது தனியார் துறையினரின் பங்களிப்புடன் அவற்றை வழங்குவது செலவுகளைக் குறைப்பதற்கு உகந்ததாக அமையுமா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டி யுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுத்துறைக்கான ஆட்சேர்ப்புச் செயற்பாடு களைச் சீரமைப்பதுடன், அரச நிர்வாகத்தின் செயற்றிற னையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தற்போதுள்ள கட்டமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடன், பொதுநிதி திறம்படப் பயன் படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், பொதுச் சேவையைத் தொழில்முறைத் தன்மையும் ஈர்ப்பும் கொண்ட துறையாக மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் பரந்த நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்க தெரிவித்தார்.