மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கு மத்தியிலும் 27ஆவது வாரமாக இன்றும் (23) நடத்தப்பட்டது.
தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக அனுபவித்து வரும் அவலங்களையும் சுமந்துகொண்டு, தமது உரிமைக்காக மயிலிட்டி மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மழை, வெயில் என இயற்கையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து வரும் மக்கள், பெய்துவரும் கன மழைக்கு மத்தியிலும், தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறிப்பாக வாரங்கள் கடந்து, மாதங்கள், வருடங்கள் என உருண்டோடும் நிலையிலும் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காமை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



