கொழும்பு துறைமுகத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் விலகல்: முதலீட்டுச் சூழல் குறித்து கவலை

பிராந்தியத்தின் முன்னணி சரக்குப் பரிமாற்ற மையமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தில், பாரிய தளவாட மையமொன்றை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கூட்டு முயற்சியிலிருந்து சைனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விலகியதற்குப் பின்னால், புவிசார் அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட பல காரணிகள் இருப்பதாக இலங்கை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனா மெர்ச்சண்ட்ஸ் நிறுவனம் விலகியமை இலங்கைக்கு துரதிர்ஷ்டவசமானது எனினும், இந்த முடிவை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்துடன் மட்டும் தொடர்புபடுத்துவது தவறு என BRISL (Belt and Road Initiative Sri Lanka) அமைப்பின் பணிப்பாளர் மாயா மஜுரன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த இடர் காரணிகளின் தாக்கத்தினால் இத்திட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமற்றதாகியுள்ளதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இத்திட்டத்தின் முடிவில் மூன்று முக்கிய காரணிகள் ஒன்றிணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“முதலாவதாக, புவிசார் அரசியல் அழுத்தம். கொழும்பின் தளவாட உட்கட்டமைப்பில் சீனாவின் ஈடுபாட்டை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து கவலையுடன் நோக்கி வருகின்றன. இதனால், இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் செலவு அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளால் ஓரளவு உந்தப்பட்டு, வரிச் சலுகைக் காலத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம், நீண்டகாலத்தில் வருவாயைப் பெற்றுத்தரும் தளவாட வசதித் திட்டத்தின் நிதி இலாபத்தைக் கணிசமாகக் குறைத்தது.

மூன்றாவதாக, காணித் தகராறுகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான தாமதங்கள் உள்ளிட்ட மெதுவான அனுமதி நடைமுறைகள், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இடரையும் மூலதனச் செலவையும் அதிகரித்தன” என அவர் தெரிவித்துள்ளார்.

BRISL என்பது சீனாவின் பட்டுப்பாதை முன்னெடுப்பு (BRI) திட்டத்தின் கீழ் கலாசார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் நிபுணத்துவம் பெற்ற கல்வி மற்றும் ஆலோசனைத் தளமாகும்.

வெளிப்புறச் சூழ்நிலைகள் மற்றும் வர்த்தக ரீதியான பரிசீலனைகளை மதிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சூழல் மற்றும் கால அட்டவணையில் ஏற்பட்ட மாற்றங்கள், அத்துடன் ஒவ்வொரு தரப்பினரினதும் வர்த்தக ரீதியான பரிசீலனைகள் உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. திட்டத்தை மறுமதிப்பீடு செய்த பின்னர், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதே அனைத்துத் தரப்பினரினதும் நலன்களுக்கு உகந்தது எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட நிறுவனத்தின் 2025 டிசம்பர் 31ஆம் திகதிய தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின்படி, பங்குதாரர்கள் மொத்தமாக 37.14 மில்லியன் அமெரிக்க டொலரை (சுமார் 12.3 பில்லியன் ரூபாய்) ரொக்கமாக முதலீடு செய்துள்ளனர்.

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள, சைனா மெர்ச்சண்ட்ஸ் நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான ஃபார்ச்சூன் சென்டர் குரூப், 26 மில்லியன் டொலரை (சுமார் 8.6 பில்லியன் ரூபாய்) முதலீடு செய்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையும், கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டுமான நிறுவனமான அக்சஸ் இன்ஜினியரிங்கும் தலா 5.57 மில்லியன் டொலரை (சுமார் 1.84 பில்லியன் ரூபாய்) முதலீடு செய்துள்ளன.

ஒப்பந்தத்தின்படி, வரி மற்றும் தாமதக் கட்டணப் பொறுப்புகளைக் கழித்த பின்னர், எஞ்சியுள்ள 26 மில்லியன் டொலரைப் பங்குதாரர்களுக்குத் திருப்பிச் செலுத்த துறைமுக அதிகாரசபை இணங்கியுள்ளது. இதில், அதிகாரசபை ஏற்கெனவே செலுத்திய 3.9 மில்லியன் டொலர் (சுமார் 1.29 பில்லியன் ரூபாய்) பெறுமதியான பெறுமதி சேர் வரியும் (VAT) அடங்குகிறது.

எஞ்சியுள்ள 21.905 மில்லியன் டொலரை (சுமார் 7.25 பில்லியன் ரூபாய்) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 30 நாட்களுக்குள் ஒரே தவணையில் செலுத்த அதிகாரசபை இணங்கியுள்ளது.

திட்ட நிறுவனத்தில் எஞ்சியுள்ள சுமார் 7.85 மில்லியன் டொலர் (சுமார் 2.6 பில்லியன் ரூபாய்) ரொக்கத்துடன், இந்தத் தொகையை ஒருங்கிணைத்து, பங்குதாரர்களின் உரிமைப் பங்குகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளிக்க அதிகாரசபை நடவடிக்கை எடுக்கும்.

இதன்படி, சைனா மெர்ச்சண்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் சுமார் 20.83 மில்லியன் டொலரை (சுமார் 6.89 பில்லியன் ரூபாய்) பெறும். அக்சஸ் இன்ஜினியரிங் நிறுவனமும் இலங்கை துறைமுக அதிகாரசபையும் தலா சுமார் 4.46 மில்லியன் டொலரை (சுமார் 1.48 பில்லியன் ரூபாய்) பெறும். இதன் மூலம் ஒவ்வொரு பங்குதாரரும் தாம் முதலீடு செய்த தொகையில் சுமார் 80 சதவீதத்தை மீளப் பெறுவர்.

சைனா மெர்ச்சண்ட்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆழ்கடல் கொள்கலன் முனையமொன்றை இயக்கி வருகிறது. அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் இந்நிறுவனம் இயக்குகிறது.

எனினும், அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அதிகரிக்க வேண்டிய தேவை இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இவ்வேளையில், இந்தத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் விலகியமை, நாட்டின் முதலீட்டுச் சூழலுக்கு சாதகமான அறிகுறியாக அமையாது.

நன்றி: Daily Mirror