அமெரிக்க நன்கொடையாளர்கள் ‘கரப்பான் பூச்சி’ இயக்கத்துக்கு நிதியுதவி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் அமெரிக்க நன்கொடையாளர்கள், நாட்டின் இளைஞர்கள் தலைமையிலான ‘கரப்பான் பூச்சி’ போராட்ட இயக்கத்திற்கு நிதியுதவி அளித்து வருவதாக அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமைதியான எதிர் இயக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். புது டெல்லியில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் இரண்டு தலைவர்களுக்கு ஐந்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க நன்கொடையாளர்கள், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் அவரது இயக்கத்திற்கு நிதியுதவி அளித்து வருவதாக மில்பென் புதன்கிழமை அன்று X தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்தகைய நன்கொடையாளர்கள், தங்கள் சொந்த நாடுகளில் உள்ள பழமைவாதத் தலைவர்களுக்கு சவால் விடுவதற்காக, அமெரிக்காவில் கல்வி கற்ற ஆர்வலர்களைத் திரட்டும் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுவதாக அவர் கூறினார்.
முன்னதாக, வெளிநாட்டு நிதியுதவி குற்றச்சாட்டுகளை திப்கே நிராகரித்தார். CJP அமைப்பாளர்களும் நண்பர்களும் போராட்டங்களுக்கு நிதியளிக்கப் பணம் திரட்டுவதாக அவர் கூறினார். இந்த அமெரிக்கப் பாடகி, ஜூன் 2023-ல் மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது, வொஷிங்டன் டி.சி-யில் நடைபெற்ற, புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடினார்.
அமெரிக்காவிலிருந்து வரும் சீர்குலைக்கும் சக்திகளுக்கு இந்தியப் பிரதமர் அடிபணிய மாட்டார் என்று கூறி, மில்பென் மோடிக்கு ஆதரவளித்துள்ளார். என்று கூறப்படும் நன்கொடை யாளர்களை அவர் அடையாளம் காட்டவில்லை, அல்லது எந்தவொரு நிதிப் பரிமாற்றங்களுக்கும் ஆதாரம் வழங்க வில்லை.
காவல்துறை நகரை முடக்கியிருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின் தலைமையில் கடந்த வாரம் இந்தியத் தலைநகரில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு முதல், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் எனப் பதிவு செய்யப்பட்டவர்கள் உட்பட 13 கோடிக்கும் அதிகமான பெயர்களை நீக்கிய நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரினர்.