பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்கு: சாட்சி விசாரணை ஒத்திவைப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவைக் கடத்திச் சென்று காணாமலாக்கிய விவகாரம் தொடர்பாக 9 இராணுவ புலனாய்வாளர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (16) இந்த வழக்கு மேலதிக குறுக்கு விசாரணைகளுக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது வழக்கின் நான்காவது சாட்சியாளரான சுமதி சுரேஷ்குமார் அல்லது முரளி அல்லது தவேந்திரன் என்னும் சாட்சியாளரிடம் ஒன்பதாவது பிரதிவாதி சார்பில் மேலதிக குறுக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கடந்த தவணையில் வழங்கிய சாட்சியத்தை மேலும் உறுதிப்படுத்தி, பிரகீத் எக்னலிகொடவுடன் ஹபரண பகுதி தோட்டத்தில் நடந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து சாட்சியாளர் திறந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.  இதன்போது கடந்த வாரம் வழங்கிய சாட்சியத்தின் போது ஹபரண தோட்டத்தில் வைத்து இரண்டாவது பிரதிவாதி நாதநுடன் சேர்ந்து எக்னலிகொடவை சந்தித்ததாகவும், அப்போது அரச தலைவரை கொலை செய்வது தொடர்பாக பிரகீத் எக்னலிகொடவுடன் சில கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றதாகவும் சாட்சியாளர் சாட்சியம் அளித்திருந்தார். அதனை மேலும் விளக்கி வெள்ளிக்கிழமை (16) சாட்சியாளர் சாட்சியம் அளித்திருந்தார்.

இதன்போது ஒன்பதாவது பிரதிவாதி சார்பாக குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்த சட்டத்தரணி அசித் சிரிவர்தன கேள்வி எழுப்பி, அக்காலகட்டத்தில் அரச தலைவராக கடமையாற்றியவர் யார் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சாட்சியாளர் மஹிந்த ராஜபக்ச என பதிலளித்தார். அத்தோடு யுத்தத்தை நிறைவு செய்த தலைவர் அவரா என மீண்டும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கும் பதிலளித்த சாட்சியாளர் ஆம் என பதிலளித்தார்.

அதேவேளை மீண்டும் சாட்சியாளரிடம் சாட்சியங்களை நெறிப்படுத்திய அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா இந்த விடயம் தொடர்பாக மேலதிக கேள்வியினை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த சாட்சியாளர், பிரகீத் எக்னலிகொடவை தான் சந்தித்தபோது யுத்தம் நிறைவடைந்த போதும் பிரச்சினைகள் இன்னும் முடிவடையவில்லை என்ற கருத்துப் பரிமாறல் ஆரம்பித்ததாகவும், அதன்போது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஒன்றாக விமானத்தில் பயணிக்கும் போது மிசைல் தாக்குதல் ஒன்றினை நடத்தினால் எல்லாம் முடிந்துவிடும் என பிரகீத் எக்னலிகொட குறிப்பிட்டதாகவும், அதனை எக்னலிகொட  நகைச்சுவைக்காக  குறிப்பிடுதை போலவே தனக்குத் தோன்றியதாகவும் சாட்சியாளர் விளக்கம் அளித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஷ் சலே நீதிமன்றத்திற்கு சாட்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார். அரச சாட்சியாக அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்போடு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் இராணுவத்தின் சட்டப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜெயசிங்க சமர்ப்பித்த ஆவணங்களை மையப்படுத்தி கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும் துவான் சுரேஷ் சலேவுக்கு காண்பிக்கப்பட்ட ஆவணத்தை, இராணுவ புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆவணம் என்பதை ஏற்றுக்கொள்ள துவான் சுரேஷ் சலே மறுத்தார். அதேநேரம் எக்னலிகொட விவகாரத்தில் தான் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்ததை அவர் ஒப்புக்கொண்டார். எனினும் அந்த வாக்குமூலத்தின் பிரதி தனக்கு வழங்கப்படவில்லை எனவும், அதனை பார்க்காமல் தன்னால் சாட்சியம் அளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் பிரகீத் எக்னலிகொட  இராணுவ உளவுப் பிரிவினருக்கு வழங்கப்படும் தொலைபேசிகள் தொடர்பாகவும் விசேட சாட்சியம் ஒன்றினை அவர் அளித்திருந்தார்.  இராணுவ உளவுத்துறைக்குள் ஒரு நடைமுறை காணப்படுவதாகவும், இருவேறு நடைமுறைகளின் கீழ் இராணுவத்தினருக்கான உத்தியோகப்பூர்வ தொலைபேசிகள் வழங்கப்படுவது வழமை எனவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக உளவுத்துறை அதிகாரிகளுக்கான தொலைபேசிகள் அவர்களது சொந்த பெயர்களில் வழங்கப்படுவதில்லை என அவர் இதன்போது திறந்த நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.  இந்நிலையில் இது தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.