இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேராவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கியூபாவின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இலவசக் கல்வி முறைமையைத் தொடர்ந்து பேணிவரும் கியூபாவின் அனுபவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, வைத்திய கல்வியில் கியூபா பெற்றுள்ள அனுபவங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விசார் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தற்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கியூபாவில் வைத்திய கல்வியைத் தொடர்ந்து வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும் கியூபா பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மொழிசார் துறைகளில் தொடர்புகளை ஏற்படுத்துதல், மாணவர் மற்றும் கல்விசார் பரிமாற்றங்களை ஊக்குவித்தல், இரு நாடுகளின் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் கியூபா தூதுவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி, பிராந்தியத்தின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வடமாகாணத்தின் பாரம்பரியக் கைத்தொழில்களில் ஒன்றான பனைசார் உற்பத்தித் துறையை நவீனமயப்படுத்தி, அதன் உற்பத்தித் திறனையும் பொருளாதாரப் பங்களிப்பையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர அனுபவப் பகிர்வையும் ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து ஆராய்வதன் முக்கியத்துவம் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.



