திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளார் உப்புவெளி பிரதேச சபைத் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (15) வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூட்டத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன எழுப்பிய தவிசாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்து விளக்கமளிக்க முற்பட்ட வேளையில், இருவருக்குமிடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்காமல் தவிசாளர் பாதியிலேயே வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.
சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார்,
திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு, ஏனைய பிரதேசங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
உப்புவெளி பிரதேச சபையின் சுமுகமான நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்குச் சில தரப்பினரால் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விடயங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் சமமான நிதி ஒதுக்கீடும் முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும்.
தவிசாளரின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, அரசாங்கம் எந்தவொரு பிரதேசத்தையும் புறக்கணிக்கவில்லை.
பிரதி அமைச்சர் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் இன, மத அல்லது பிரதேச வேறுபாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதில்லை.
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திக்கும் அரசாங்கம் தொடர்ந்து பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருகிறது.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் மூதூர் கட்டைப்பறிச்சான் பால நிர்மாணம் உள்ளிட்ட பல பிரதான திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சிலர் இனரீதியான பாகுபாடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டுவது முற்றிலும் தவறானது. மக்களின் அடிப்படை அபிவிருத்தித் தேவைகளை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உப்புவெளி பிரதேச சபைத் தவிசாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்குப் பிரதி அமைச்சர் அளித்துள்ள புள்ளிவிவர விளக்கங்களும் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நிதிப் பங்கீடு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.



