2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தவருடம் மாத்திரம் 874 எச்ஐவி தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 487 எச்ஐவி தொற்றாள்பர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் வியாழக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
1986 ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது எச்ஐவி நோயாளி பதிவானது முதல், நோயை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு முதல் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதுடன், 2026 ஆம் ஆண்டிலும் இந்த அதிகரிப்புத் தொடர்கிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள், இணைய பயன்பாடு அதிகரித்துள்ளமை மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோர் மற்றும் நரம்பு வழியே போதைப்பொருளைச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை என்பன இந்நோய் பரவலுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
தற்போது பால் உறவுகளின் போது பாதுகாப்பு முறையை பின்பற்றாமை, பாலியல் தொழிலில் ஈடுபடுவதாலும் எச்ஐவி உள்ளிட்ட ஏனைய பால்வினை நோய்கள் சமூகத்தில் அதிகரித்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வருவதுடன், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சகல வயதுப் பிரிவினரிடையேயும், பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களிடையேயும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆண்களுக்கு இடையில் (பால்புதுமையீனர்கள்) நிலவும் பாதுகாப்பற்ற உறவு இந்த நோய் பரவ முக்கிய காரணமாக உள்ளது.



