மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசத்தின் உதவி குறித்து அரசாங்கம் தகவல்

01. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் ஏன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் பின்வாங்குகிறது? சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்புடன் DNA. பரிசோதனைகளை மேற்கொள்ள ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்திய அவர், மனித உரிமை மீறல்களுக்கான உள்ளகப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசாங்கம் சர்வதேச அரங்கில் குறிப்பிடும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கேள்விகளை எழுப்பினார்.

மோதல் தொடர்பான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும் போதுமான ஆதாரங்கள் உள்ள நபர்களை தகுதியான நீதிமன்றங்களின் முன் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகின்றது.

மனித உரிமைகள் பேரவையின் முன் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா? மேலும் பொறுப்புக்கூறல் தொடர்பான உயர்ஸ்தானிகரின் கவலைகளை நிவர்த்தி செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவை என்று அரசாங்கம் கருதுகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுகள் உட்பட பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதற்கான வழக்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது? என்றும் அவர் கூறினார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக பொறிமுறைமீது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதாலும் அந்த தமிழ் சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் உள்நாட்டு பொறிமுறைகளை மட்டுமே போதுமான பதிலாக ஏற்பதை நிராகரிக்கிறது என்பதையும் அவர் இதன்போது பதிவு செய்தார்.

அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பு, சுயாதீன அரசு வழக்கறிஞர்கள், சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், பாதிக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு மற்றும் தீவிர மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வினவினார்.

அதேநேரம், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுவது மற்றும் சர்வதேச தடயவியல் உதவி ஆகியவை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டைத் அறிவித்துள்ளது ?

யாழ்ப்பாணம் சித்துபாத்தி செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக பொறிமுறை விசாரணைகளை கோரவில்லை.

சர்வதேச ரீதியான விசாரணைகளையே கோருகிறார்கள்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் ஏன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் பின்வாங்குகிறது? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியதுடன் இது குறித்து அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, செம்மணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் தேவையான கட்டத்தில் சர்வதேச நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

செம்மணி மனிதப் புதைகுழி மட்டுமன்றி ஏனைய மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன.

நீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே அந்தப் பணிகள் இடம்பெறுகின்றன.

அந்த விடயத்தில் சர்வதேச விசேட நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளோம்.

ஐ.நா. அல்லது ICCR ஆகியவற்றின் ஆய்வாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் செம்மணியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன.

இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் தேவையேற்படும்போது, DNA தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவும் மற்றும் காலங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளவும் விசேட நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.