பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் எஞ்சியுள்ள காலப்பகுதியை உடனடியாக அமுல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட பகிரங்க பிடியாணைக்கு அமைய அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (07) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று (07) காலை கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
எனினும், மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் போது சிறைச்சாலை சீருடையையே அணிய வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெற்றவர்களுக்கு மாத்திரமே சாதாரண ஆடைகளை அணிய அனுமதி வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்



