2024ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாக வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், இலங்கை இதுவரை 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை, சுமார் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இறக்குமதி செய்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் வாகன இறக்குமதிக்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் (LCs) திறக்கப்பட்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் இதுவரை 1.69 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான LCகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சரின் தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை 79,000க்கும் மேற்பட்ட கார்கள், 12,000 வர்த்தக வாகனங்கள், 3,148 பேருந்துகள் மற்றும் வேன்கள், 317,000 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 40,000 முச்சக்கர வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டில் 90,000க்கும் மேற்பட்ட கார்கள், 11,000 வர்த்தக வாகனங்கள், 2,185 பேருந்துகள் மற்றும் வேன்கள், 225,000 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 22,000 முச்சக்கர வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்த வாகன இறக்குமதி காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், வாகன இறக்குமதிக்கான செலவினங்கள் இருந்தபோதிலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது சுமார் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



