சமீபத்தில் இலங்கையின் பிரபல பாடகி யோஹானியின் இசை நிகழ்ச்சி ஒன்றை அடுத்து “எமது கொடி எமது மொழி எமது இசை” என்ற பேஸ்புக் பதிவை அடிப்படையாகக் கொண்டு, அமா எதிரிசிங்க என்ற பெண் வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் மாத்திரமன்றி, இலங்கைத் தமிழ் சமூகத்தினரிடையேயும் பெரும் அதிர் வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இடப் பட்ட அப்பதிவை பகிர்ந்துள்ள அமா எதிரிசிங்க என்ற பெண் வெளியிட்ட கருத்து, தற்போது இலங்கைத் தமிழ் சமூகத்தினரிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பேரதிர்வலையையும் கடுமையான கொந்தளிப்பையும் ஏற் படுத்தியுள்ளது.
அமா எதிரிசிங்க தனது பதிவில்:
“கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் தேயிலை பறிக்கவும் இங்கு வந்தவர்கள், இப்போது இந்த இடத்தையே தாங்கள்தான் நடத்துவது போல நடந்துகொண்டு பேசும் அபத்தமான பேச்சைப் பாருங்கள். சொல்லப்போனால், அவர்கள் தங்கள் கற்பனையிலேயே ஒரு தனி நாட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தேசப் பற்றை வெளிப்படுத்துவதாகக் கூறிக்கொ ண்டு, நாட்டின் பொருளாதாரத் தூண்களாகத் திகழும் மலையகத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த இந்த வெறுப்புப் பேச்சுக்கு, தற்போது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது பலத்த கண்டனங் களைப் பதிவு செய்து வருகின்றனர். அமா எதிரிசிங்கவின் இந்தக் கூற்று, தனிப்பட்ட ஒருவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சு மாத்திரமல்ல. அது தலைமுறை தலைமுறையாக இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர் கொண்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனவாதத்தினதும் சாதிய ஒடுக்குமுறையினதும் மீண்டு மொரு வெளிப்பாடாகும்.
இன்றளவும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் ஒரு பகுதியினரிடையே, மலையக மக்கள் இந்நாட்டின் பூர்வீக உரிமையாளர்கள் அல்லர்; அவர்கள் ‘கழிவறை சுத்தம் செய்யவும் தேயிலை கொழுந்து பறிக்கவும் கூலிகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மை ஆழமாகப் பதிந்துள்ளது. சமூக அந்தஸ்திலும் பொருளாதார நிலையிலும் இவர்களை எப்போதும் அடிமைகளாகவும் தாழ்ந்தவர்களாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற இன மேலாதிக்கச் சிந்தனையை இத்தகைய பதிவுகள் பிரதிபலிக்கின்றன.
அத்துடன் இது இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன ஒதுக்கலின் வெளிப்பாடாகும். 203 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான தூணாக விளங்கும் ஒரு சமூகத்தை, சமூக அந்தஸ்திலும் பொரு ளாதார ரீதியிலும் தாழ்ந்தவர்களாகவே கருதும் ஒரு குறுகிய மனநிலையை இது பிரதிபலிக்கிறது. இருப்பினும், இத்தகைய இனவாதப் பேச்சுகளுக்கு எதிராக மலையக அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டும் கருத்துகள் பெரும்பான்மை சமூகத்தின் இந்த அறியாமையைத் தோலுரித்துக் காட்டு கின்றன.
இந்த விடயம் தொடர்பில் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி அமா எதிரிசிங்கவின் பதிவுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், “சில நேரங்களில் மௌனம் என்பது சம்மதமாகிவிடும். இது அப்படிப்பட்ட ஒரு தருணம்” என்று கூறி தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தேயிலை கொழுந்து பறித்த கைகளை இழிவுபடுத்துவது எளிது. ஆனால் அந்தக் கைகள் இந்த நாட்டிற்கு செய்த பங்களிப்பை மறைப்பது அவ்வளவு எளிதல்ல. எங்கள் மக்கள் சொகுசான வாழ்க்கையைத் தேடி வந்தவர்கள் அல்ல. கடினமான மலைகளில், மிக மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தலைமுறை தலைமுறையாக உழைத்து, நாட்டின் தேயிலைத் தொழிலை வளர்த்தெடுத்தவர்கள்.
கழிவறையைச் சுத்தம் செய்வதிலோ, தேயிலை கொழுந்து பறிப்பதிலோ எந்த அவமானமும் இல்லை. அந்த வேலையைச் செய்யும் மனிதர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கும் அமா எதிரிசிங்க போன்றவர்களின் குறுகிய மனநிலையில்தான் அவமானம் இருக்கிறது” என்று ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எங்கள் இடம் எதுவென்று யாரும் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. இது எங்கள் நாடும் கூட, இங்கு பிறக்கிறோம், வாழ்கிறோம், வாக்களிக் கிறோம், நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் பங்களிக்கிறோம். எனவே, இந்த இனவாத மற்றும் சாதிய இழிவைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது என்றும், இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை குறித்த பேஸ்புக் பதிவுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “மண்ணை வளப் படுத்திய தியாகிகள்” என்று பெருந்தோட்ட மக்களை குறிப்பிட்டுள்ளார். “மலையக மக்கள் உண்மையில் தியாகிகள். 203 வருடங்களுக்கு முன்பு காடாக இருந்த அடர்ந்த பிரதேசங்களை அழித்து, நாட்டின் மண்ணை வளப்படுத்தி, அந்நிய செலாவணியைப் பெற்றுத் தந்தவர்களே இந்த மக்கள். மனசாட்சியும் மனிதநேயமும் உள்ள எவரும் இத்தகைய இழிவான விமர்சனங்களைச் செய்ய மாட்டார்கள்.
மலையக மக்களுக்கு ‘வீடு’ என்பது வெறும் செங்கல்லாலும் சீமெந்தாலும் கட்டப்படும் சாதாரண கட்டடம் அல்ல; அது அவர்களின் பல தசாப்தகாலக் கனவு, கௌரவம், சுயமரியாதை மற்றும் காணியுரிமை சார்ந்த அடையாளம். இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட மக்களை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இதேவேளை, அமா எதிரிசிங்கவின் பேஸ்புக் பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கொந்தளித்துள்ள இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும், இலங்கைத் தேயிலைச் சபை வெளியிட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கான உத்தியோகபூர்வ தரவுகளை முன்வைத்து தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இலங்கைத் தேயிலைச் சபை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 13.65 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாவில் சுமார் 4.521 ட்ரில்லியன்) ஈட்டித் தந்துள்ளனர். அப்படியென்றால் கடந்த 203 ஆண்டுகளில் இவர்கள் ஈட்டிய வருமானம் எவ்வளவு? உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடிக் காலங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை முடங்கி, வருமானம் பூச்சியமாக மாறியது.
அப்போது அமா எதிரிசிங்க உள்ளிட்ட பெரும் பான்மையின மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்த போது, 2019 முதல் 2023 வரை மாத்திரம் 6.48 பில்லியன் டொலர் வருமானத்தைக் கொண்டுவந்து கொடுத்தவர்கள் இந்த மலையகத் தமிழர்களே. அவர்கள் தேயிலைக் கூடைகளோடு மழையிலும் குளிரிலும் சிந்திய வியர்வையில் கிடைத்த அந்நியச் செலாவணியைக் கொண்டுதான் நாடு கொரோனா தடுப்பூசிகளையும், பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளையும் இறக்குமதி செய்தது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இத்தனை பில்லியன் டொலர்களை ஈட்டித் தரும் இந்த மக்களின் வாழ்வியல் இன்றும் துயரம் நிறைந்ததாகவே உள்ளது.
கடும் மழையிலும் பனியிலும் 12 மணிநேரத்திற்கு மேலாக உழைக்கின்றனர். முன்னைய காலத்தில் அட்டைக்கடிக்கு மட்டுமே ஆளான இவர்கள், இன்று அட்டைக் கடியுடன் குளவிக் கொட்டு, நச்சுப் பாம்புகளின் தீண்டல் மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் என உயிரைப் பணயம் வைத்தே தேயிலை பறிக்கின்றனர். இயற்கைச் சீற்றங்களான மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்குகளுக்கு மத்தியில் இன்றும் குறுகிய ‘லயன் அறைகளிலேயே’ வசித்து வருகின்றனர்.
இவர்களின் பிள்ளைகளுக்கான தரமான பாடசாலைக் கட்டமைப்போ அல்லது முறையான மருத்துவ வசதிகளோ இன்றும் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், அன்று தேயிலை கொழுந்து பறித்தவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இன்று தங்களின் சுயமுயற்சியினால் மருத்துவர்களாக, சட்டத்தரணிகளாக, ஆசிரியர்களாக, பொறியியலாளர்களாக, தொழில்முனைவோராக, நாடாளு மன்ற உறுப்பினர்களாக நாட்டின் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் சமூக ஊடகங்களில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளில் மற்றொரு முக்கிய கோரிக் கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டம் அனைத்துச் சமூகங்களுக்கும் சமமானது என்றால், அரசாங்கம் மலையக மக்களைச் சமமாக மதிக்குமானால், இனவாதத்தையும் வெறுப்புப் பேச்சையும் பரப்பிய இந்த அமா எதிரிசிங்க உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.
அத்துடன், மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குச் சென்று சலுகைகளை அனுபவிக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், இந்த இனவாதப் பெண்ணைச் சட்டத்தின் முன் நிறுத்தத் துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை விதியாகும். நாட்டின் பொரு ளாதாரத்திற்கு உயிரைக் கொடுத்து உழைக்கும் ஒரு சமூகத்தை, “கழிவறை சுத்தம் செய்ய வந்தவர்கள்” என்று சிறுமைப்படுத்துவது அமா எதிரிசிங்க போன்றவர்களின் அறியாமையையும் இனவாத வக்கிரத்தையுமே காட்டுகிறது.
மலையக தமிழ் மக்களின் உழைப்பும் தியாகமும் இன்றி இலங்கையின் வரலாறு இல்லை. இவர்களின் கண் ணியத்தைச் சீண்டிப் பார்க்கும் இத்தகைய இனவாதப் போக்குகள் சட்டப்பூர்வமாகத் தண்டிக்கப்படுவதோடு, இவர் களுக்கான காணியுரிமை, கௌரவமான வீட்டுத் திட்டம் மற்றும் சம உரிமைகள் வழங்கப்படுவதே இந்நாட்டின் உண் மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்.



